ஆண்டிபட்டி:மதுரை -- போடி அகல ரயில்பாதை திட்டத்தில் உசிலம்பட்டி -- ஆண்டிபட்டி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
2021 மே மாதத்திற்குள் மதுரை - தேனி ரயில் சேவை துவங்கும் என மதுரை கோட்ட மேலாளர் லெனின் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட மதுரை -- போடி மீட்டர் கேஜ் ரயில் சேவை 2009- ல் நிறுத்தப்பட்டது. தண்டவாளங்கள் அகற்றப்பட்டு 10 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த மதுரை -- போடி அகல ரயில் பாதையில் உசிலம்பட்டி வரையிலான பணிகள் முடிந்து ஜன. 24-ல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான 21 கி.மீ.,துார பணிகள் முடிந்த நிலையில் நேற்று 8 பெட்டிகளுடன் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. 17 நிமிடங்களில் 21 கி.மீ.,: ரயில்வே முதன்மை பாதுகாப்பு கமிஷனர் அபய்குமார்ராய், தலைமை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) ரவீந்திரபாபு, தலைமை பொறியாளர் இளம்பூரணன், கோட்ட மேலாளர் லெனின், உதவி தலைமை பொறியாளர் சூரியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேற்று டிராலியில் முதலில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின் உசிலம்பட்டியில் இருந்து மாலை 5.13 மணிக்கு எட்டு பெட்டிகளுடன் அதிவேக ரயில் மூலம் ஆண்டிப்பட்டிக்கு சென்றனர். அதிகபட்சம் 110 கி.மீ., வேகத்தில் 17 நிமிடங்களில் 5.30க்கு இந்த ரயில் ஆண்டிபட்டி சென்றது.ஆண்டிபட்டி ஸ்டேஷன் வந்த ரயிலை, ரவீந்திரநாத் எம்.பி., ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் லோகிராஜன், துணைத்தலைவர் வரதராஜன், மக்கள் வரவேற்றனர். ரயில்வே துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
மதுரை கோட்ட மேலாளர் கூறியதாவது: அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தேனி வரையில் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இயக்கப்படும். அக்டோபரில் போடி வரை ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது , என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE