மதுரை:'மதுரை காமராஜ் பல்கலையில், போலிச் சான்று பெற்ற, 500 பேரின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு:தமிழ் வழியில் படித்தோருக்கு, மாநில அரசுப் பணியில், 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குரூப் 1 தேர்விற்கு, டி.என்.பி.எஸ்.சி., ஜனவரி, 20ல் அறிவிப்பு வெளியிட்டது.
இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ் வழியில் படித்ததற்குரிய, பி.எஸ்.டி.எம்., சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர். இவர்கள் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பை தமிழ் வழியில் படிக்கவில்லை.கல்லுாரிகளில் ஆங்கில வழியில் படிக்கின்றனர். பல்கலை தொலைநிலைக் கல்வியில், கூடுதலாக ஒரு பட்டத்தை தமிழ் வழியில் படித்து, சான்று பெறுகின்றனர்.
தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு, இட ஒதுக்கீடு பொருந்தாது. டி.என்.பி.எஸ்.சி., யின் குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும்.பள்ளிக்கல்வி, கல்லுாரி வரை, தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க, டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.
ஏற்கனவே, விசாரணையில் நீதிபதிகள், 'தமிழ் வழியில் படித்ததற்கான ஒதுக்கீட்டில், 2016 முதல், 2019 வரை, 85 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களின் கல்விச்சான்றை, டி.என்.பி.எஸ்.சி., தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
டி.என்.பி.எஸ்.சி., தரப்பு, '53 பேர் தொலைநிலைக் கல்வி, 32 பேர் கல்லுாரியில் பயின்றவர்கள்' எனக் கூறி, ஆவணங்களை தாக்கல் செய்தது.
நீதிபதிகள்: மதுரை காமராஜ், அண்ணாமலை பல்கலையில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள்தான் அதிகம் தேர்வாகியுள்ளனர்.
மதுரை காமராஜ் பல்கலை தரப்பு: இப்பல்கலையில், 500 பேருக்கு போலிச் சான்றுகள் வழங்கிய விவகாரத்தில், தொலைநிலைக் கல்வி கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டாளர் ராஜராஜன் உட்பட மூன்று அலுவலர்கள் மீது, 2019ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டு உள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடக்கிறது.
நீதிபதிகள் உத்தரவு: 500 பேரில் யாராவது, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் மூலம் நியமனம் பெற்று உள்ளனரா, யார், யாருக்கு போலிச்சான்று வழங்கப்பட்டுள்ளது என கண்டறிய வேண்டி உள்ளது.போலிச் சான்று பெற்ற, 500 பேரின் பட்டியலை, பல்கலை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு ஆவணங்களை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும். அவர் ஆஜராக வேண்டும்.
தமிழ் வழி அல்லது எந்த மொழியில் படித்தனர் என்ற விபரத்தை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண்பட்டியலில் குறிப்பிட்டால், இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்கலாம்.இதில் தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு இன்றைக்கு, ஒத்தி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE