குளிர்காலத்தில் குழந்தைகளைக் காக்க

Added : டிச 16, 2020 | |
Advertisement
மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கிவிட்டது. இனி காலையில் கண் விழிக்கும்போதே கொட்டும் பனியும் குளிர்க்காற்றும் ஊசிக்குத்தலாக உடலை ஊடுருவி இடைஞ்சல் செய்யும். மார்கழிப் பனியில் ஈரப்பதம் அதிகம் என்பதால், நோய்க் கிருமிகளுக்குக் கொண்டாட்டம் கூடிவிடும். சாதாரண ஜலதோஷத்திலிருந்து கொடுமையான கொரோனா வரை பல நோய்கள் நமக்குத் தொல்லை தரும்.பெரியவர்களுக்கே இத்தனை சிரமம்
 குளிர்காலத்தில் குழந்தைகளைக் காக்க…

மழைக்காலம் முடிந்து குளிர்காலம் தொடங்கிவிட்டது. இனி காலையில் கண் விழிக்கும்போதே கொட்டும் பனியும் குளிர்க்காற்றும் ஊசிக்குத்தலாக உடலை ஊடுருவி இடைஞ்சல் செய்யும். மார்கழிப் பனியில் ஈரப்பதம் அதிகம் என்பதால், நோய்க் கிருமிகளுக்குக் கொண்டாட்டம் கூடிவிடும்.


சாதாரண ஜலதோஷத்திலிருந்து கொடுமையான கொரோனா வரை பல நோய்கள் நமக்குத் தொல்லை தரும்.பெரியவர்களுக்கே இத்தனை சிரமம் என்றால், சிறு குழந்தைகளுக்கு எவ்வளவு சிரமங்கள் ஏற்படும் என்று எண்ணிப் பாருங்கள்! இளம் தாய்மார்களுக்கு அவை பெரிய சவாலாகவே இருக்கும். ஆனாலும், சில பக்குவங்கள் அந்தத் தொல்லைகள் குழந்தைகள் பக்கம் வராமல் தடுக்கும்.


குளிர்கால நோய்கள்குளிர்காலத்தில் சிறு குழந்தைகளுக்கு அதிகம் தாக்கக்கூடிய நோய்கள் வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், தும்மல், இளைப்பு. இவை பெரும்பாலும் அடுத்தவர்களிடமிருந்து எளிதாகத் தாக்கும் என்பதால் குழந்தைகளை மற்றவர்கள் அடிக்கடி துாக்கிக் கொஞ்சுவதைத் தடுத்துவிடுங்கள். குறிப்பாக, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் குழந்தையைக் கொடுக்காதீர்கள். பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும் சளி, இருமல் போன்ற நோய்த்தொற்று இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.குழந்தைகளுக்கு ஈரமாகிவிட்ட டயாப்பரை உடனே மாற்றிவிடுங்கள். அநேக குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டு குளிர் காய்ச்சல் வரும். ஈரமான டயாப்பரைத் தொடர்ந்து பல மணி நேரம் மாற்றாமல் இருப்பது அதற்கு ஒரு காரணம்.
வீட்டில் சுத்தமான சூழல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய்மார்கள் வெளியில் சென்று வந்த பிறகும், குழந்தைக்கு டயாப்பர் மாற்றிய பிறகும் தங்கள் கைகளை சோப்பு போட்டுச் சுத்தம் செய்வதன் மூலம் நோய் தாக்கும் கிருமிகள் குழந்தைக்குப் பரவுவதைத் தடுக்கலாம்.


குளிர் கால குளியல்குழந்தையின் குளியல் நேரம் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் இருக்க வேண்டாம். குளிப்பாட்டும்பொழுது தண்ணீரின் சூட்டை அம்மாக்கள் தங்கள் முழங்கை வைத்துச் சோதித்துப் பார்க்க வேண்டும். குழந்தையின் கழுத்துப்பகுதி, தோலின் மடிப்புகள் போன்ற இடங்களில் பால் மற்றும் அழுக்குகள் படிந்திருக்கும். அந்த இடங்களைப் பாசிப்பருப்பு மாவு தேய்த்து இளம் சூடான தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தினால் போதுமானது. அதுபோல் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் உடல் பகுதிகளில் சோப்பைப் பயன்படுத்த வேண்டாம். இளம்சூடான தண்ணீர் ஊற்றி சுத்தமாகக் கழுவினாலே போதும். குளித்த பின்பு குழந்தைக்கு உடை மாற்றும் அறையில் பேன், 'ஏசி'யை அனைத்துவிடுங்கள். வெறும் உடம்போடு குழந்தையை அதிக நேரம் வைக்காமல் உடனே உடை மாற்றிவிடுங்கள்.


சருமப் பாதுகாப்புகுழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்யலாமா என்று ஒரு சந்தேகம் அநேக தாய்மார்களுக்கு உண்டு. தாராளமாகச் செய்யலாம் என்பதே என் பதில். தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான எண்ணெய்யைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது. குளிர்காலத்தில் மட்டுமல்லாமல், எல்லா காலங்களிலுமே குழந்தைகளுக்கு மசாஜ் செய்தால் மகிழ்ச்சியாக உணர்வார்கள். அதுமட்டுமில்லாமல் ரத்த ஓட்டம் சீராகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.குழந்தைகளின் தோல் மிகவும் மென்மையானது என்பதால் குளிர்காலத்தில் அவர்களின் சருமம் எளிதாக வறட்சியடையும். தோலில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ள அவர்களைக் குளிப்பாட்டிய பின்பு பேபி மாய்ச்சுரைசர், ஆலிவ் ஆயில் ஏதாவது ஒன்றை தேய்த்து விடலாம். குழந்தைகளுக்குப் பெரியவர்களைப்போல் உடம்பில் அதிகமாக அழுக்குகள் இருக்காது. சோப்பு, லோஷன், ஷாம்பூ, கிரீம், பவுடர் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்தினால் சருமம் வறட்சி அடையவே வாய்ப்பு அதிகம். சோப்பை அளவோடு பயன்படுத்துவது குளிர்காலத்தில் சரும வறட்சி யில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும். கொசுக்கடியைத் தவிர்க்க இரவில் கொசுக்கடி களிம்புகளைக் குழந்தையின் கை, கால்களில் பூசிவிடுங்கள்.


தாய்ப்பால் முக்கியம்குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். அதன் பலனால் குழந்தைகளுக்குக் குளிர்கால நோய்த் தொற்றுகள் குறையும். மேலும் தாயின் பாலும், உடல் சூடும் குழந்தையை இதமாக உணரச் செய்யும். தாய்ப்பால்தான் குழந்தைக்கு முதல் தடுப்பூசி. அதேபோல் குழந்தைக்கு பருவ கால தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளவும் மறக்காதீர்கள்.குழந்தையின் உடை விஷயத்தில் ஆன்லைன் சந்தையில் கிடைக்கும் ஏராளமான நவீன உடைகள் தாய்மார்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். நமது ஊர் தட்பவெப்பத்திற்கு குழந்தைகள் எந்த நேரமும் ஸ்வெட்டர், கையுறை, காலுறை, தொப்பி ஆகியவை அணிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில நேரங்களில் ஆடைகளால் அதீத வெப்பமாகி குழந்தைக்கு வியர்க்கலாம். சருமத்தில் கொப்பளம் வரலாம். ஒவ்வாமை காரணமாக அரிப்பு ஏற்படலாம். மூச்சுத்திணறல்கூட ஏற்படலாம்.

அதனால் அறைகளின் வெப்பநிலை மற்றும் குழந்தையின் உடல்தன்மைக்கேற்ப துணிகளைத் தேர்வு செய்வதே சிறந்தது. முக்கியமாக, செயற்கை நுால் ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.சில குழந்தைகளுக்குக் கம்பளித் துணி ஒவ்வாமையைக் கொடுக்கும். அதனால் அவர்களுக்குப் பருத்தி ஆடைகள் அல்லது மென்மையான துணிகளைத் தேர்வு செய்யலாம். இரவு நேரங்களிலும் பயணத்தின் போதும் ஸ்வெட்டர், கையுறைகள், தொப்பி, காலணிகளை அணிவிக்கலாம். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு வசதியான ஆடைகளை அணிவித்தால்தான் நிம்மதியாக உறங்குவார்கள்.உணவில் கவனம்குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு எளிதாக செரிக்கக் கூடிய உணவு வகைகளைத் தேர்வு செய்யுங்கள். முக்கியமாக, அவர்கள் மெனுவில் சூப்புகளும் பழச்சாறுகளும் இடம்பெற வேண்டும். காய்கறி சூப், மூலிகை சூப், பூண்டு, சீரகம், மிளகு கலந்த சூப் என இயற்கையான வழிகளில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் குளிர்கால நோய்களை எளிதில் எதிர்கொள்ளலாம்.குளிர்காலத்தில் வீடும், குழந்தையின் அறையும் வெதுவெதுப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வீட்டில் அதிக ஈரம் இருக்கக்கூடாது. வீட்டில் ஜன்னல், கதவுகளைப் பகலில் திறந்து வைத்திருக்க வேண்டும்.
அப்போதுதான் வீட்டிலுள்ள கிருமிகள் வெளியேற வழி கிடைக்கும். குளிர்க் காற்று வீசும் அறைகளில் மட்டும் இரவில் ஜன்னல்களை மூடிவிடுங்கள்.குளிர்காலம் நோய்களுக்கான காலம் இல்லை. குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டிய காலம். குழந்தைகளின் பராமரிப்பில் இளம் தாய்கள் சரியான கவனம் செலுத்தி, வீட்டில் சுகாதாரமான சூழலை உருவாக்கிக் கொண்டால் குளிர்காலத்தையும் இனிமையாக மாற்றலாம்.-டாக்டர் கு.கணேசன்மருத்துவ இதழியலாளர் ராஜபாளையம். gganesan95@gmail.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X