திண்டிவனம்: மொரட்டாண்டி டோல்கேட் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டிற்கு செல்லும் சாலை சந்திப்பில், இருந்த வேகத்தடை அகற்றப்பட்டதால் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் வழியாக, புதுச்சேரியில் இருந்து சேதராப்பட்டு, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, மயிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கிறது. இதே போன்று, வானூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி மக்கள், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு வழியாக மொரட்டாண்டி டோல்கேட் அருகில் உள்ள நான்கு முனை சந்திப்பை கடந்து புதுச்சேரி பகுதிக்கு செல்கின்றனர்.திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலை சந்திப்பில், சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மூலம் விபத்தை தடுக்க சில மாதங்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில், டோல்கேட் நிர்வாகத்தின் சார்பில், புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில் புதிய சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.அப்போது, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சந்திப்பில் நூறு மீட்டர் தூரத்திற்கு தார் சாலை போட்டனர். இதில், வேகத்தடை மீதும் தார் சாலை போட்டதால், தற்போது, வேகத்தடை இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போனது. இதனால், தினந்தோறும் விபத்துக்கள் நடந்து வருகிறது. சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.ஏற்கனவே இந்த சந்திப்பில் ஏற்பட்ட விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இப்பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க வேகத்தடை அமைக்க டோல்கேட் நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE