விழுப்புரம்:தொழிலில் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, 1.75 கோடி ரூபாய் ஏமாற்றிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, துருகம் சாலையைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் அருட்செல்வி, 36. அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், 2018ல் அருட்செல்வியிடம் ராசி கல், வைரக்கல் வியாபாரம் செய்ய உள்ளதாக கூறி, பண உதவி கேட்டுள்ளார். பணம் கொடுத்தால், இரண்டு மாதத்திற்குள், இரு மடங்காக தருவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து,முண்டியம்பாக்கம் தீன் மெடிக்கல் உரிமையாளர் ஜாகீர் என்பவர், அருட்செல்வியிடம் அறிமுகமானார். அவர், வெளிநாட்டு நிறுவனங்களில் ஏஜென்டாக இருப்பதாக கூறி, செந்தில், காளிராஜ் தன் கூட்டாளிகள் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அருள்செல்வி, 7 லட்சம் ரூபாய், அவரது தந்தை மணி, 5 லட்சம் ரூபாய் மற்றும் இரு உறவினர்களிடம், 1 கோடிக்கும் மேல் என, 1.75 கோடி ரூபாயை பெற்று, மோசடி செய்தனர்.நவ., 12ம் தேதி பணத்தை கேட்ட அருட்செல்விக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்த புகார்படி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் வழுதரெட்டியில் பதுங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த காளிராஜ், 53; விழுப்புரத்தைச் சேர்ந்த ஜாகீர், 52, ஆகியோரை கைது செய்தனர். செந்திலை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE