பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சட்ட விரோத மது விற்பனையை கண்காணிக்க தவறிய போலீஸ் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொள்ளுப்பாளையத்தில், வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்து இருப்பதாகவும், சூதாட்டம் நடப்பதாகவும், தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது. எஸ்.ஐ., ராஜேஷ்கண்ணா மற்றும் போலீசார், அங்கு, 'மினி பார்' போன்று வீட்டில், சரக்கு பாட்டில்களை, அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்ததுடன், பணம் வைத்து சீட்டாடுவதை கண்டறிந்தனர்.
அங்கிருந்து, 650 மதுபான பாட்டில்கள் மற்றும், 62 ஆயிரத்து 200 ரூபாய் சூதாட்ட பணத்தை பறிமுதல் செய்தனர். ஐந்து பேரை கைது செய்தனர்.கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், மதுபானம் பதுக்கி, வீட்டில் 'பார்' போன்று செயல் படுத்தியதையும், பணம் வைத்து சூதாடுவதையும்கோ மங்கலம் போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
ரோந்து சென்று கண்காணிப்பு செய்ய தவறியது குறித்து, கோவை ரூரல் எஸ்.பி., விசாரித்தார். இதையடுத்து, கோமங்கலம் எஸ்.ஐ., மணிமாறனை, ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., உத்தரவிட்டார்.எஸ்.பி., அருளரசு கூறுகையில், ''தாலுகா போலீஸ் ஸ்டேஷன் - கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில், மது சில்லிங் விற்பனை, சூதாட்டம் நடப்பது குறித்து, கோமங்கலம் போலீசாருக்கு எப்படி தெரியாமல் போனது. இதனால், சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE