மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், உருளைக்கிழங்கு உரிய விலை கிடைக்காததால், நீலகிரி விவசாயிகள் ஏலத்தை தடுத்து நிறுத்தினர். இதனால், 250 டன் உருளைக்கிழங்கு தேக்கம் அடைந்தது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளையும் உருளைக்கிழங்கு களை இங்கு ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். நேற்று காலை, 9:00 மணிக்கு ஏலம் துவங்கியது.உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் ஏலத்தை நிறுத்தும்படி அலுவலகம் முன் போராட்டம் செய்தனர். 250 டன் உருளைக்கிழங்கு தேக்கம் அடைந்தது.
நீலகிரி விவசாயிகள் கூறுகையில், 'ஏலத்தில், 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை அடிப்படை விலை, 900 ரூபாய் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஏலம் துவங்கினர். இதே உருளைக்கிழங்கு தனியார் மண்டிகளில், 1,800 முதல், 2,000 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலே, கிழங்கின் விலையை முடிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
குறைந்தபட்ச விலை, 1,500 என ஏலம் தொடங்க வேண்டும்' என்றனர்.கூட்டுறவு சங்க மேலாளர் மகாலட்சுமி கூறுகையில், ''கடந்த இரண்டு மாதங்களாக கூட்டுறவு சங்கத்திற்கு, அதிகளவில் உருளைக்கிழங்கு விற்பனைக்கு வருகிறது. அக்டோபர் மாதம், 45 கிலோ மூட்டை, அதிகபட்ச மாக, 2,500 ரூபாய்க்கும், நவம்பர் மாதம், 2,730 ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது.இன்று (நேற்று) குறைந்தபட்சம், 1,300 க்கும், அதிகபட்சம், 1,550 ரூபாய்க்கு ஏலம் போனது. உருளைக்கிழங்குக்கு தேவைக்கு ஏற்ப, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE