மதுரை : மதுரை நகர் ஆயுதப்படை போலீசாருக்கு தற்செயல் விடுப்பும்
(சி.எல்.), கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா அனுமதித்தும் விடுமுறை நாளில்
வேலை பார்த்ததற்கான விடுமுறையும் (இ.எல்.) எடுக்க அனுமதி மறுப்பதாக புகார்
எழுந்துள்ளது. போலீசார் மன அழுத்தத்திற்குள்ளாகும் அவலம் உள்ளது.
போராட்டம், திருவிழா, வி.ஐ.பி., பாதுகாப்புக்கு ஆயுதப்படை போலீசார் பயன்படுத்தப்படுகின்றனர். போலீஸ் துறையில் வார விடுமுறை இல்லாததால், ஓய்வு எடுக்கும் நாளிலும் பணிபுரிந்தால் அதற்காக 'இ.எல்.' (விடுமுறை எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அல்லது அந்நாளுக்குரிய சம்பளம் வழங்கப்படும். இதனால் பெரும்பாலான போலீசார் 'இ.எல்.' எடுக்காமல் பணிபுரிகின்றனர்.
தவிர்க்க முடியாதபட்சத்தில் அந்த விடுமுறையை எடுக்க உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்கும்போது, 'ஆள் பற்றாக்குறை; பாதுகாப்பு பணி உள்ளது' என ஏதாவது காரணத்தை கூறி அனுமதி மறுக்கப்படுகிறது. குடும்ப சூழல், மருத்துவ காரணங்களை கூறி 15 நாட்கள் கேட்டால், 5 நாட்களுக்கு மட்டுமே தருகிறார்கள். இதனால் போலீசார் மனஉளைச்சலுக்குள்ளாகின்றனர்.
போலீசார் கூறியதாவது: இ.எல். விடுமுறை கமிஷனர் அனுமதித்தாலும் ஆயுதப்படை துணை கமிஷனர் அனுமதிப்பதில்லை. தற்செயல் விடுப்பு எடுக்க விடுவதில்லை. கொரோனா காலத்தில் விடுமுறை எடுக்காமல் பணியாற்றினோம். தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், விடுமுறை எடுக்க அனுமதி மறுக்கின்றனர். அடுத்ததாக தேர்தல் வந்து விடும். இதனால் நாங்கள் மட்டுமல்ல, குடும்பத்தினரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE