மதுரை : மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் 51 பேருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இம்மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் பேரை கொரோனா தாக்கியது. 19,500 பேர் மீண்டுள்ளனர். 446 பேர் மரணத்தை தழுவினர். தொற்றிடம் மீண்டாலும் பலரின் உடலில் வைரஸின் தாக்கம் தொடர்வதை நிபுணர்கள் கண்டறிந்தனர். இவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அரசு, தனியார் தரப்பில் கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டன.
அரசு மருத்துவமனை 120வது பிரிவில் இம்மையம் செயல்படுகிறது. இம்மையத்தை நுரையீரல் துறையினர் கவனிக்கின்றனர். கொரோனாவிடம் மீண்டு 28 நாட்களுக்குப் பிறகும் பாதிப்பு இருந்தால் இங்கு சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதுவரை 51 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்
டாக்டர்கள் கூறுகையில், '51 பேரில் ஒருவருக்கு நுரையீரல் முற்றிலும் பாதித்துள்ளது. அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். செயற்கையாக ஆக்ஸிஜன் வழங்குகிறோம். மற்ற 50 பேருக்கும் வெவ்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. குறிப்பாக, உடல் அசதி, லேசான மூச்சுத்திணறல், அன்றாட பணியை கவனிப்பதில் சிரமம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன. பாதிப்புகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சீரான இடைவெளியில் மீண்டும் அவர்கள் சோதனைக்கு வர வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE