திருவனந்தபுரம்: கேரளாவை சீரழிக்க முயன்றவர்களுக்கு பதிலடியாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன என, உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், கேரளாவில் நடந்த, உள்ளாட்சித் தேர்தலில், ஆளும், இடது ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. நேற்று இரவு நிலவரப்படி, ஆளும் இடது ஜனநாயக முன்னணி, 514 கிராம பஞ்சாயத்துகள், ஐந்து மாநகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துகளில் முன்னிலையில் உள்ளது. மேலும், 108 வட்டார பஞ்சாயத்துகளிலும், இந்தக் கூட்டணி முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தக் கூட்டணி, 375 கிராம பஞ்சாயத்துகள், 44 வட்டார பஞ்சாயத்துகள், 45 நகராட்சிகள் மற்றும் மூன்று மாவட்ட பஞ்சாயத்துகளில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ., 23 கிராம பஞ்சாயத்துகள், இரண்டு நகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து, முதல்வர், பினராயி விஜயன் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி முன்னணி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இது மக்களுக்கான வெற்றி, கேரளாவை சீரழிக்க முயன்றவர்களுக்கு பதிலடியாக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. எங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலைவணங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE