பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில், பா.ஜ., விவசாயிகள் சேவை மைய திறப்பு விழா நேற்று நடந்தது. அக்கட்சியின், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், சேவை மையத்தை திறந்து வைத்தார். அங்கு நடந்த கூட்டத்தில், முன்னாள் எம்.பி., ராமலிங்கம், மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்பட பலர் பேசினர். தொடர்ந்து, வறண்டு கிடக்கும் பனமரத்துப்பட்டி ஏரியை, அக்கட்சியினர் பார்வையிட்டு, தண்ணீர் நிரம்ப, ஒரு நிமிடம் பிராத்தனை செய்தனர். பின், நிருபர்களிடம் நாகராஜ் கூறியதாவது: தமிழகத்தை, 50 ஆண்டு காலம் ஆண்ட திராவிட கட்சிகள், நீர் ஆதாரத்தை முழுமையாக சீரழித்துள்ளது வேதனை. ஏரி நிரம்ப, படகு ஓட, மீன்கள் துள்ளி விளையாட, பிரார்த்தனை செய்தோம். இதுகுறித்து, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம். சேலம் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவோம். ஆக்கிரமிப்பை அகற்றி, நீர்வரத்து சீர்செய்து, தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தவறினால், மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சரை அழைத்து வந்து, ஏரியை புனரமைக்க நடவடிக்கை எடுப்போம். ஒரு மாதத்தில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை எனில், விவசாயிகள், மக்களை திரட்டி, கவன ஈர்ப்பு நடைபயண பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அதேபோல், காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, விவசாயிகள் சேவை மையம் திறக்கப்பட்டது.
திருமணிமுத்தாற்றை மீட்க பா.ஜ., கையெழுத்து இயக்கம்: திருமணிமுத்தாற்றில், கழிவற்ற தூய்மையான தண்ணீர் செல்லும்படி, ஆற்றை சுத்தப்படுத்தக்கோரி, சேலம், பா.ஜ., கிழக்கு மாவட்ட விவசாய அணி சார்பில், பூலாவரி பாலம் அருகே, மக்களிடம் லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம், நேற்று தொடங்கப்பட்டது. அக்கட்சியின், விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தொடங்கிவைத்து பேசியதாவது: கழிவு, செடி, கொடியால், அழியும் நிலையில் உள்ள திருமணிமுத்தாற்றை மீட்க வலியுறுத்தி, கட்சி நிர்வாகிகள், மக்களிடம், ஒரு லட்சம் கையெழுத்துகள் பெற்று, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ஜிஜேந்திர சகாவத்திடம் ஒப்படைக்கப்படும். இதனால், ஆற்றை நம்பி விவசாயம் செய்து வரும் மூன்று மாவட்டங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவதோடு, ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி தூய்மையடைந்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். பா.ஜ., கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் சுரேந்திரன், பொதுச்செயலர் சுகுமார், கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE