சேலம்: போலீசார் கிடுக்கிப்பிடியால், புது, 'ரூட்'டில், குட்கா, ஹான்ஸ் கடத்தல் தொடர்கிறது.
பெங்களூருவில் இருந்து, சேலம் வழியாக, தென் மாவட்டங்களுக்கு, அழுகிய காய்கறி, அரிசி மூட்டை, இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களுக்கு இடையே மறைத்து, குட்கா, ஹான்ஸ் கடத்தப்பட்ட நிலையில், அதற்கு பயன்படுத்திய லாரிகள், சரக்கு ஆட்டோக்களை, சேலம் மாநகர போலீசார் பறிமுதல் செய்தனர். குறிப்பாக, ஓமலூர், கருப்பூர் சுங்கச்சாவடியில் தொடங்கி, சீல்நாயக்கன்பட்டி பைபாஸ் வரையான பகுதியில், அதிகளவில் வாகனங்கள் பிடிபட்டன. இதனால், கடத்தல் கும்பல், அந்த தடத்தை தவிர்த்துவிட்டனர். தற்போது, ஊத்தங்கரை, அருர், மஞ்சவாடி கணவாய் வழியாக, சேலம், அயோத்தியாப்பட்டணம் வந்தடைகின்றனர். இந்த புது, 'ரூட்'டை, போலீசார் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: டில்லியை சேர்ந்தவர் சரத் மதன்லால், 45. இவர், பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, குட்கா, ஹான்ஸ், பான்பராக்கை மொத்தமாக வாங்கி, பெங்களூரு வழியாக, தமிழகத்துக்கு வினியோகிக்கிறார். இதற்காக, மாவட்டந்தோறும் பெரிய வியாபாரிகள் இருவர், அவர்களின் கீழ், சிறு வியாபாரிகள், 10 பேர் செயல்படுகின்றனர். தென் மாவட்ட வியாபாரிகளுக்கு, 'ஹிந்தி' தெரியாது என்பதால், அவர்களை ஒருங்கிணைத்தல், பணப்பரிமாற்றம் செய்யும் வேலைகளை, சேலத்தை சேர்ந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, இருவர் மேற்கொள்கின்றனர். வாரத்தில், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக தென், மத்திய மாவட்டங்களுக்கு, 30 லாரிகளிலும், கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக, சென்னை உள்பட, வடமாவட்டங்களுக்கு, 20 லாரிகளிலும் குட்கா கடத்தப்படுகிறது. சேலம் மாநகர போலீசார், கடத்தல் வாகனங்களை மடக்கிய நிலையில், தற்போது, 'ரூட்'டை மாற்றிவிட்டனர். இதை தடுக்கவும், உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE