தர்மபுரி: மத்திய அரசின், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தர்மபுரியில் நேற்று, மூன்றாவது நாளாக, விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடந்த போராட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். இதில், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய, மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த சட்ட மசோதா ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று மூன்றாவது நாளாக, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, கோஷங்கள் எழுப்பினர். மேலும் போராட்டத்தில், டில்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், மத்திய அரசு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட, 25 பெண்கள் உட்பட மொத்தம், 65 பேரை போலீசார் கைது செய்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தை ஆதரித்து, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., செல்லகுமார், வி.சி., மாவட்ட செயலாளர் கனியமுதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாநில துணைத்தலைவர் லகுமைய்யா ஆகியோர் பேசினர். இதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட, 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE