நாமக்கல்: முதல்வர் செல்லும் வழியில் சிதறி கிடந்த ஆணிகளை பார்த்த ரோந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை அகற்றினர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வர் பழனிசாமி, நேற்று, கரூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள், கொரோனா நோய் பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அதற்காக, சேலத்தில் இருந்து, நாமக்கல் வழியாக கரூர் மாவட்டம் சென்றார். அவருக்கு, மாவட்ட எல்லையான மல்லூர் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், சேலம் மாவட்டம், மல்லூர், நாமக்கல் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை இடையே உள்ள உடுப்பத்தான்புதூர் மேம்பாலத்தில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் ஆணிகள் சிதறிக்கிடந்தன. அவற்றை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், சேலத்தில் இருந்து, பழைய இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்கு ஆட்டோ நாமக்கல் நோக்கி வந்துள்ளது. உடுப்பம்புதூர் மேம்பாலத்தில் ஆட்டோ வந்தபோது, ஆணிகள் கீழே கொட்டி சிதறியது தெரியவந்தது. அவற்றை உடனடியாக ரோந்து போலீசார் அப்புறப்படுத்தினர். முதல்வர் பழனிசாமி வருவதற்கு, அரை மணி நேரத்துக்கு முன் இந்நிகழ்ச்சி நடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE