சேலம்: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்த பேச்சு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டிச., 22ல், மண்டல அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள உயர்வு, போனஸ் குறைப்பு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன் வழங்குவது என்பன உள்பட, 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், 'ஸ்டிரைக்'கில் ஈடுபட தொழிற்சங்கங்கள், போக்குவரத்து நிர்வாகங்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கின. இதனால், சென்னையில், தொழிலாளர் துறை ஆணையர் மேற்பார்வையில், போக்குவரத்து மேலாண் இயக்குனர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை, நேற்று முன்தினம் நடந்தது. அதில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, 925 கோடி ரூபாயை உடனே வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கடந்த காலத்தில் நடந்த ஸ்டிரைக்கின்போது, பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழிற்சங்கத்தினருக்கு, மீண்டும் பழைய பணியிடங்களை விரைவில் வழங்குவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பள உயர்வு, போனஸ் குறித்த பேச்சுவார்த்தையை, ஜன., 6க்கு, கமிஷனர் ஒத்திவைத்தார்.
இதையடுத்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற, வரும், 22 மாலை, 3:00 முதல், 7:00 மணி வரை, அனைத்து மண்டல அலுவலகங்கள் முன், தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். அரசு, ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்காதபட்சத்தில், அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் அறிவிக்கும் நாளில், 'ஸ்டிரைக்' மேற்கொள்ள, தொழிலாளர் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE