வேலூர்: வேலூர், சிறைத்துறை, டி.ஐ.ஜி., ஜெயபாரதி வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று, ஐந்து மணி நேரம் சோதனை நடத்தினர். வேலூர் சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக உள்ளவர் ஜெயபாரதி. இவரது கணவர் முருகன், சென்னையில், டாஸ்மாக் மேலாளாக பணியாற்றி வருகிறார். சென்னை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் இரவு சோதனை மேற்கொண்டதில், அவரிடமிருந்து கணக்கில் வராத பணம், சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, முருகனின் உறவினர்கள், 10 பேர் வீடுகளில், நேற்று சோதனை நடத்தப்பட்டது. இதன்படி, வேலூர் தொரப்பாடியில், சிறைக்காவலர்கள் பயிற்சி மைய வளாகத்தில் உள்ள அவரது மனைவியும், டி.ஐ.ஜி.,யுமான ஜெயபாரதி வீட்டில், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான, ஏழு பேர் கொண்ட குழுவினர், நேற்று மதியம், 2:00 முதல், இரவு 7:00 வரை, சோதனை நடத்தினர். அப்போது, அவரது கணவர் முருகன் குறித்தும் விசாரணை செய்தனர். சோதனையில் பணம், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE