புதுடில்லி: மே. வங்கத்தின் ஹல்திபரி - வங்கதேசத்தின் சிலாஹதி இடையிலான ரயில் சேவையை பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் துவக்கி வைத்தனர்.
பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடந்தது. இரு தரப்பு உறவுகள், கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கைக்கு தூணாக வங்கதேசம் விளங்குகிறது. அந்நாட்டுடனான உறவை மேம்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் ஆரம்பம் முதல் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். கொரோனா பெருந்தொற்று காரணமாக, இந்த ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில், கொரோனா தடுப்பூசி, சுகாதாரத்துறையில், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றின. மஹாத்மா காந்தி மற்றும் முஜிபுர் ரஹ்மான் குறித்த டிஜிட்டல் கண்காட்சியை துவங்கி வைத்தது பெருமை அளிக்கிறது. இரு தலைவர்களும், இளைஞர்களுக்கு முன்மாதிரியாக உள்ளனர் என தெரிவித்தார்.

ஷேக் ஹசினா பேசும் போது: கொரோனாவை தடுக்க உங்களது அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. 1971ம் ஆண்டு நடந்த போரில் வீரமரணம் அடைதோருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். வீரமரணம் அடைந்த இந்திய ஆயுதப்படையினருக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கு ஆதரவு அளித்த இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து இரு தலைவர்களும் சிலஹதி - ஹல்திபாரி இடையிலான ரயில்சேவையை துவக்கி வைத்தனர். தொடர்ந்து மஹாத்மா காந்தி, முஜிபுர் ரஹ்மான் தொடர்பான இணையவழி கண்காட்சியை துவக்கி வைத்ததுடன், முஜிபுர் ரஹ்மான் குறித்த சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE