கரூர்: ''கடந்த ஆண்டில், 832 பேருக்கு வேலை கிடைக்கும் விதமாக 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் மற்றும் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மாவட்டத்தில், 4,999 பேர், கொரோனாவல் பாதிக்கப்பட்ட நிலையில், 4,863 பேர் குணமடைந்துள்ளனர். முதல்வர் சிறப்பு குறைதீர் முகாமில் பெறப்பட்ட, 35 ஆயிரத்து, 327 மனுக்களில், 23 ஆயிரத்து, 939 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கட்டளை மேட்டு வாய்க்காலை விரிவுபடுத்தி, புதுப்பித்து நவீனமயமாக்கும் பணி, 335.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கிறது. கரூர், முனியப்பன் கோவில் அருகில், 30.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்த அழைப்பு முடிவு பெற்றுள்ளது. பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில், 2017 முதல், 2020 வரை 3,033 வீடுகள் ரூபாய், 51.56 கோடி மதிப்பீட்டில் எடுத்து கொள்ளப்பட்டு, 2,247 வீடுகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 2020- 2021ம் ஆண்டு, 423 கோடி ரூபாய் சுய உதவிகுழுக்களுக்கு கடன் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களைச் சார்ந்த, 50 பஞ்., உள்ள 756 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூபாய் 486.61 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2019ம் ஆண்டில், 832 பேருக்கு வேலை கிடைக்கும் விதமாக, 2,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, கலெக்டர் மலர்விழி, எம்.எல்.ஏ., கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE