அவர்களை வீட்டிற்கு அனுப்புவோம்!
தி.மங்களம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில வாரங்களாக, இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலைவர்கள், வார்த்தைப் போரில் குதித்து, அவர்கள் செய்த ஊழல், அராஜகத்தை வெளிப்படுத்தி, ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரிப்பூசிக் கொள்கின்றனர்.தமிழகத்தில், 53 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், எவ்வளவு ஊழல், அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது, நம் அனைவருக்கும் தெரியும். வாக்காளர்களுக்கு மறதி அதிகம் என்பதால், அரசியல்வாதிகளே தற்போது அதை நினைவுப்படுத்துகின்றனர்.விரைந்து முன்னேறியுள்ள தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், அரசியல்வாதிகளின் பழைய காலங்களை, 'மீம்ஸ்' வழியாக நினைவுப்படுத்துகின்றன. இந்த பணியையும், அரசியல்வாதிகளே செய்கின்றனர் என்பது தான், கவனத்தில் கொள்ள வேண்டும்.தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழலுக்காக, 'சர்க்காரியா' முதல், ஏகப்பட்ட கமிஷன்கள் அமைக்கப்பட்டதையும், '2ஜி' ஊழல் வழக்கு இன்னும் முடியவில்லை என்பதையும், அ.தி.மு.க.,வினர் வெளிச்சமிட்டு காட்டுகின்றனர்.'அ.தி.மு.க., முன்னாள் தலைவர் ஜெயலலிதாவே, ஊழல் குற்றத்தில் தண்டனை பெற்றவர் தானே...' என, தி.மு.க.,வினர் எகிற, அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.இதை, நடுநிலை வாக்காளர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளும் சேர்ந்து பண்பாடு, பாரம்பரியமும் மிக்க தமிழகத்தை, ஊழலின் ஊற்றுக் கண்ணாக மாற்றியமைத்து விட்டன. 'மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழி' என்பது போல, அரசியல்வாதிகள் வழியை, அரசு அதிகாரிகளும் பின்பற்றி லஞ்சத்தில் மூழ்கியுள்ளனர்.'கண்ணாடி வீட்டில் இருந்தபடியே, அடுத்த வீட்டின்மேல் கல்லெறியக் கூடாது' என்பர். அதைத் தான், இரு திராவிட கட்சிகளும் செய்து வருகின்றன. நாம், அதை வரவேற்போம். குற்றவாளிகளை, தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்காமல், அவர்களை வீட்டிற்கு அனுப்புவோம்.இரு பெரும் திராவிட கட்சியினரும், நேர்மையற்றோர் என்பது தெரிந்தும், அவர்களையே மீண்டும் தேர்ந்தெடுக்கும் முட்டாள்தனத்தை, தமிழக மக்கள்
செய்யக் கூடாது.
கேள்விக்கு பதில் அளிப்பாரா?
எஸ்.விவேகானந்தன், சென்னையிலிருந்து எழுது கிறார்: 'முதல்வர் இ.பி.எஸ்., ஆட்சி, 10 நாட்களுக்கு கூட தாங்காது; கவிழ்ந்து விடும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆலமரத்தடியில் அமர்ந்து ஆருடம் சொன்னார். ஆனால், அவரது கணிப்பை பொய்யாக்கி, முழுமையாக ஆட்சி நடத்தி விட்டார்.தி.மு.க.,வினர் எவ்வளவோ அநாகரிக விமர்சனங்களை கூறினாலும், முதல்வர் இ.பி.எஸ்., நிதானத்தை கடைப்பிடிக்கிறார். யாருடனும் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை.நிருபர்களை அடிக்கடி சந்திக்கிற முதல்வராக இ.பி.எஸ்., தான் இருக்கிறார். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார். ஆனால் ஸ்டாலின், அறிக்கை மட்டும் விடுகிறார். நிருபர்களின் கேள்விகளை சந்திக்க பயப்படுகிறார்.முடிவு எடுக்கும் முன், உயர் அதிகாரிகளிடம், முதல்வர் இ.பி.எஸ்., கருத்து கேட்கிறார். அறிவிக்கப்பட்ட முடிவில் குழப்பம் ஏற்பட்டால், கவுரவம் பார்க்காமல் உடனடியாக திரும்ப பெற்று விடுகிறார். 'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என, முரண்டு பிடிப்பதில்லை.பம்பரம் போல் சுழன்று, மாவட்டம்தோறும் பயணம் செய்து, ஆய்வு நடத்துகிறார்; அதிகாரிகளுக்கு உற்சாகம் கொடுக்கிறார்.நீர் மேலாண்மை, கொரோனா பெருந்தொற்று தடுப்பு ஆகியவற்றில், தேசிய அளவில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.இப்படியே போனால்... இ.பி.எஸ்.,சுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். எனவே ஸ்டாலின், அறிக்கை மற்றும் காணொலிக்காட்சி மூலம், அரசியல் நடத்துவதை கைவிட்டு, மக்களை சந்திக்க வேண்டும்.நிருபர்களை சந்தித்து, உங்கள் எதிர்கால திட்டம் குறித்து, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
மாப்பிள்ளையும் சட்டையும்!
என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாகச் சொல்லும் நடிகர் ரஜினி, 'கட்சித் தலைவராக மட்டும் தான் இருப்பேன்; முதல்வராக மாட்டேன்' எனக் கூறியிருக்கிறார்.இது எப்படி இருக்கிறது என்றால், படையப்பா படத்தில் இடம்பெற்ற, 'மாப்பிள்ளை இவர் தான்; ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது' என்ற காமெடி போல உள்ளது.எம்.ஜி.ஆர்., கட்சியைத் துவக்கியபோது, அவர் தான் முதல்வர் வேட்பாளர் என, மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர், 'நான், அ.தி.மு.க., தலைவராக மட்டுமே இருப்பேன்' எனச் சொல்லியிருந்தால், அக்கட்சிக்கு மக்கள் ஓட்டு அளித்திருக்க வாய்ப்பே இல்லை.அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர், முதல்வர் வேட்பாளராக, தங்களை அடையாளம் காட்டித் தான், தேர்தல் பிரசாரம் செய்தனர்.'இன்னொருவரை முதல்வராக்குவேன்' என, பிரசாரம் செய்தால், ரஜினியின் கட்சிக்கு ஓட்டு போட, மக்கள் யோசிப்பர்.நடிகர் கமல் கூட, இந்த மாதிரி ஏடாகூடமாக அறிவிப்பு வெளியிட்டு, மக்களை குழப்பவில்லை.பக்தவச்சலத்தை முதல்வர் பதவியில் அமரச் செய்த காமராஜர், கட்சிப் பணியாற்ற சென்றதால் தான், 1967 தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அன்று வீழ்ந்த காங்கிரஸ், இன்று வரை எழவேயில்லை.கடந்த, 2004 முதல் 2014 வரை, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கைபாவையாக இருக்கிறார் என, விமர்சிக்கப்பட்டார். இதுவே, அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தியது.
நடக்க முடியாத நிலையிலும், கட்சித் தலைவர் பதவி மற்றும் முதல்வர் பதவியை, தன் மகனை நம்பிக் கூட, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி கொடுக்கவில்லை.துணை முதல்வர் பதவியே போதும் என, பன்னீர்செல்வம் நினைக்கவில்லை. கட்சியில், தனக்கு ஒரு பிடி இருக்க வேண்டும் என்று நினைத்துத் தானே, ஒருங்கிணைப்பாளர் என, புதிதாக ஒரு பதவியை உருவாக்கி, அதை தனதாக்கிக் கொண்டார்.எனவே ரஜினி, கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE