'அந்த, 'பணி'யை, அ.தி.மு.க., இப்போது செய்வதாக, வெளியே பேசிக் கொள்கின்றனரே...' என, ஜாடை மாடையாக சொல்லத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டி: ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு, தி.மு.க., அரசு மட்டுமே. கருணாநிதி குடும்பமே, தமிழகத்தை சுரண்டியது. அவர்களுக்கு, அ.தி.மு.க., அரசை குற்றம் கூற தகுதி கிடையாது.
'நீங்கள் சேர்ந்திருந்தாலும், பிற கோஷ்டிகள் உங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருப்பர்; அந்த அளவுக்கு தீவிர கொள்கையாளர்களாக உள்ளனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பாரதிய கிசான் சங்கத்தின் தேசிய செயலர் பெருமாள் பேட்டி: டில்லி விவசாயிகள் போராட்டத்தில் இடதுசாரிகளும், தேசத்துக்கு எதிரான சக்திகளும் ஊடுருவி உள்ளன. போராட்டத்தை அவர்கள் தவறாக வழி நடத்துவதாலும், போராட்டத்தில் அரசியல் பின்னணி உள்ளதாலும், எங்களின் கிசான் சங்கம் பங்கேற்கவில்லை.
'பிரச்னைக்கான காரணத்தை ஆராயாமல், அறிக்கை விடுவதால் பலனில்லை. அதனால் தான், காலம் காலமாக இந்த பிரச்னை நீடிக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழக மீனவர்கள் மீது, கடந்த பல ஆண்டுகளாகவே, இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடக்கிறது. மத்திய அரசு, உடனே வெளியுறவுத்துறை அமைச்சர் வாயிலாக, இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி, இப்பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டும்.
'நீங்க சொல்லிட்டீங்க... தி.மு.க., தலைவர் என்ன கணக்கு வச்சிருக்காரோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமான் பேட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தி.மு.க., கூட்டணியில் உள்ளது. எங்கள் கட்சிக்கு, 15 தொகுதிகள் சாதகமாக உள்ளன. உரிய இடங்களை நாங்கள் கேட்டுப் பெற்று, போட்டியிடுவோம்.
'எதிர்க்கட்சிகளால், எதையும் செய்ய முடியும் என்பதை, அவ்வப்போது அரசுக்கு காட்டி வருகின்றனர்; அரசும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மேலிட பார்வையாளர் ரவி பேட்டி: மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு பல நன்மைகளை தருகின்றன. ஒட்டுமொத்த நன்மையும், விவசாயிகளை சென்றடைய, அரசு துணை நிற்கும். எதிர்க்கட்சிகள், விவசாயிகளுக்கு பதில், இடைத்தரகர்களுக்கு துணை நிற்கின்றன. அவர்களால் தவறாக வழிநடத்தப்படும் விவசாயிகள் மட்டுமே, போராட்டத்தில் உள்ளனர்.
'எங்கள் தலைமையில் மூணாவது அணின்னு, ஆளாளுக்குச் சொல்லிக்கிட்டிருக்கீங்க... அப்படின்னா, ஏகப்பட்ட அணிகள் ஆயிடுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேட்டி: அ.தி.மு.க., கூட்டணியில், எங்கள் கட்சி உள்ளது. வரும் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப்படும். மூன்றாவது அணி அமைந்தால், அது எங்கள் தலைமையில் தான் அமைய முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE