தஞ்சாவூர் ஓவியங்களை வரைந்து, பிரபலமாகி வருவது பற்றி, கும்பகோணம், காமராஜ் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம்: என் அப்பா, நாடகக் கலைஞர். அப்பா, அம்மா இருவரும் எனக்கு, 10 வயதாக இருக்கும் போதே இறந்து விட்டனர். மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். விவசாய பண்ணை, அண்ணனின் எலக்ட்ரிக்கல் கடை போன்ற பல இடங்களில் வேலை பார்த்துள்ளேன். எனினும், நேர்த்தியான, அழகு மிகுந்த தஞ்சாவூர் ஓவியங்கள் மீது சிறு வயதிலிருந்தே, எனக்கு ஆர்வம் அதிகம். அந்த பாரம்பரிய ஓவியம் வரைவது எப்படி என்பதை, முறைப்படி கற்றுக் கொண்டேன். கடந்த, 36 ஆண்டு களாக, தஞ்சாவூர் ஓவியங்கள் வரைந்து வருகிறேன். முதல் ஓவியத்தை, என் 20 வயதில் வரைந்தேன். என் வாழ்வாதாரத்தை உயர்த்தியது, தஞ்சாவூர் ஓவியங்கள் தான். இப்போது என்னிடம், 40க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள், தஞ்சாவூர் ஓவியங்களை வரையும் வேலை செய்கின்றனர்.இதை வரைவது அவ்வளவு எளிதல்ல. எந்த அளவில் ஓவியம் வரைய வேண்டுமோ அதற்கு ஏற்ற மரப் பலகையில், வெள்ளை காடா துணியை நன்றாக ஒட்டி, சாக்பீஸ் பவுடர், பெவிகால் மற்றும் மஞ்சள் நிற காவி பவுடர் ஆகியவற்றை கலந்து, பெயின்ட் மாதிரி அடிக்க வேண்டும்.இவ்வாறு, மூன்று கோட்டிங் வரை அடித்து, கூழாங்கல்லால் வழவழப்பு தன்மை வரும் வரை நன்றாக தேய்ப்போம். வரையப் போகிற ஓவியத்தின் மாதிரியை பார்த்து, அதன், 'அவுட்லைன்' மேல், அலங்கார கற்களை பதித்து, தங்க முலாம் பூசிய தாளை ஒட்டி, தஞ்சாவூர் ஓவியத்தை உருவாக்குவோம். அதை, அழகிய தேக்கு மரத்தால் ஆன, 'பிரேம்' செய்து, அதில் பொருத்தி விட்டால், அழகிய ஓவியம் ரெடி! தஞ்சாவூர் ஓவியங்களில் பெரும்பாலும், சுவாமி படங்களே அதிகம். குறிப்பாக, லட்சுமி, சரஸ்வதி, வெங்கடாஜலபதி, விநாயகர், முருகன், ராமர் போன்ற ஓவியங்களே வரையப்படுகின்றன. உலகின் எந்த பாகத்திற்கும் தஞ்சாவூர் ஓவியத்தை பத்திரமாக அனுப்பி வைக்க முடியும். அதன் அளவிற்கு ஏற்ப, சூட்கேஸ்கள் உள்ளன. அதனுள், ஓவியங்களை பத்திரமாக வைத்து, எந்த மூலைக்கும் அனுப்பி வைக்க முடியும். அழகிய தஞ்சாவூர் ஓவியங்கள், 5,000 ரூபாய் முதல், 25 லட்ச ரூபாய் வரை, பல விதமான அளவுகளில், கலை நேர்த்தியுடன் செய்யப்படுகின்றன.
இந்தியா மட்டுமின்றி, உலகில் எந்த நாட்டிலும் இருக்கும் தஞ்சாவூர் ஓவியங்களில் சிலவாவது எங்களது கை வண்ணத்தில் உருவானதாகத் தான் இருக்கும்.தஞ்சாவூர் ஓவியம், என் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. என் வாழ்க்கையை உயர்த்தியது, தஞ்சாவூர் ஓவியங்கள் தான் என்றால் மிகையில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE