புதுடில்லி: சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.,வை வலுபடுத்தும் வகையில், மேற்கு வங்கத்திற்கு, அமித் ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் பலர், படை எடுக்கத் துவங்கியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, வரும் ஏப்ரல் - மே மாதங்களில், தேர்தல் நடக்கவுள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள, திரிணமுல் காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற, பா.ஜ.,வும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், மாநிலத்தில், பா.ஜ.,வின் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்து, அதை மேலும் துரிதப்படுத்தும் வகையில், மத்திய அமைச்சர்கள் பலரை, மேற்கு வங்கத்திற்கு அனுப்பிவைக்க, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த வாரம் இறுதியில், அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், சஞ்சீவ் பல்யான், பிரகலாத் படேல், அர்ஜுன் முண்டா, மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர், வரும் நாட்களில், செல்ல உள்ளனர்.
உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா உள்ளிட்டோருக்கும், சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் ஒவ்வொருவருக்கும், ஆறு அல்லது ஏழு தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டு, பணிகள் வழங்கப்பட உள்ளன.இது தொடர்பாக ஆலோசிக்க, அமித் ஷா தலைமையில், டில்லியில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சியில் இருந்தும் விலகல்!
மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த திரிணமுல் காங்.,கின் சுவேந்து அதிகாரி, நேற்று முன்தினம், எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திரிணமுல் காங்.,கில் இருந்தும், நேற்று அவர் விலகினார். அதற்கான ராஜினாமா கடிதத்தை, முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அனுப்பி வைத்தார். இந்த வாரம் இறுதியில், மேற்கு வங்கத்திற்கு வரும் அமித் ஷா முன்னிலையில், சுவேந்து அதிகாரி, பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதிகாரி ஆய்வு
விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், மேற்கு வங்கத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார்.தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து, மாவட்ட அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். இன்றும், நாளையும், அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன், சுதீப் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE