வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் யோசனை| Dinamalar

வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் யோசனை

Updated : டிச 19, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (26)
புதுடில்லி: 'வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்த யோசனையை, மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், டில்லியில் கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், டில்லியில் போக்குவரத்து பெரும்
 வேளாண் சட்டங்கள், சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், யோசனை

புதுடில்லி: 'வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்த யோசனையை, மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், டில்லியில் கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், டில்லியில் போக்குவரத்து பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி, சட்டக்கல்லுாரி மாணவர் ரிஷப் சர்மா உட்பட பலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி பாப்டே தலைமையில், நீதிபதி போபண்ணா, ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது.

நேற்று நடந்த விசாரணையின் போது, நீதிபதிகள் கூறியதாவது:வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மட்டுமே, விசாரித்து முக்கிய முடிவெடுக்கப்படும். சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது, அடிப்படை உரிமை என்பதை ஒப்புக் கொள்கிறோம். போராட்டம் நடத்துவதற்கு, விவசாயிகளுக்கு உரிமை உள்ளது.ஆனால், போராட்டம் நடத்தும் விதம் குறித்து கவனிக்க வேண்டியுள்ளது.பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மாற்றம் ஏற்படுத்த முடியுமா என, மத்திய அரசை கேட்க விரும்புகிறோம்.வேளாண் சட்டங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க, விவசாயிகள், அரசின் பிரதிநிதிகள் அடங்கிய சுயாட்சித்தன்மை கொண்ட குழுவை அமைத்து, தீர்வு காணலாம் என நாங்கள் நினைக்கிறோம். அதுவரை போராட்டம் நடக்கலாம்; ஆனால் மக்களின் வாழ்க்கைக்கு, எந்த ஆபத்தும் நேரக்கூடாது.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறுகையில், ''போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், முககவசம் அணியவில்லை. கொரோனா அச்சம் விலகாத நிலையில், இந்தப் போராட்டத்தால், தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளது. மற்றவர்களின் அடிப்படை உரிமைகளை, விவசாயிகள் மீற முடியாது,” என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது.விவசாயிகள், வன்முறையை துாண்டக்கூடாது. நகருக்கு செல்லும் வழிகளை மறிக்கக்கூடாது.உங்கள் பிரச்னைகளை, பேசி தீர்க்க முடியும். இதற்காகத் தான், குழு அமைக்க ஆலோசித்து வருகிறோம்.வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான வழிகளை, மத்திய அரசு ஆராய வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.


இதற்கு, அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியதாவது: வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தால், பேச்சு நடத்த விவசாயிகள் வரமாட்டார்கள். அதனால், இந்த யோசனையை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்றம் அமைக்கும் குழு, வேளாண் சட்டங்களின் ஒவ்வொரு பிரிவுகளையும், தீவிரமாக ஆலோசித்து விவாதிக்கட்டும். அவர்களால், அந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என, சொல்ல முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.வழக்கு விசாரணை, அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


விவசாயி மரணம்


டில்லியில் நடந்து வரும் போராட்டத்தில் பங்கேற்றிருந்த பஞ்சாப் மாநிலம், பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஜெய் சிங், 38, நேற்று காலை இறந்து கிடந்தார். அவரது மரணத்தக்கான காரணம் தெரியவில்லை.

ஜெய் சிங்குடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அவரது சகோதரர் கூறுகையில், ''நெஞ்சு வலி காரணமாக, ஜெய் சிங் இறந்து விட்டார்'' என்றார். ''இறந்த விவசாயி ஜெய்சிங்கின் குடும்பத்துக்கு, மத்திய அரசு, 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என, பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஷிங்காரா சிங் தெரிவித்தார். 'போராட்டம் துவங்கப்பட்ட நாளிலிருந்து, இதுவரையிலும், 20 விவசாயிகள் இறந்துள்ளனர்' என, விவசாய சங்க தலைவர் ஒருவர் தெரிவித்தார்.


வேளாண் சட்ட நகல்களை கிழிப்பு


டில்லி முதல்வர் ஆவேசம்டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு நடக்கும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க, டில்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் கெஜ்ரிவால், வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்தார். அவர் பேசியதாவது: கொரோனா அச்சுறுத்தல் உள்ள காலத்தில், வேளாண் சட்டங்களை அவசர அவசரமாக நிறைவேற்றியது ஏன்? விவசாயிகளுடன் பேசி, வேளாண் சட்டம் தொடர்பாக விளக்குவோம் என, மத்திய அரசு சொல்கிறது. இந்த சட்டத்தால், விவசாயிகள் பயன்பெறுவர்; அவர்களின் நிலம் பறிக்கப்படாது என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது தான், விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபமா? வேளாண் சட்டங்களை, டில்லி சட்டசபை நிராகரிக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.


அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை


விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், உணவு அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். டில்லியில் பா.ஜ. தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுடனான பேச்சு பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X