கோல்கட்டா:பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, மேற்கு வங்கத்தில் பணிபுரியும் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
தாக்குதல்
பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா, இரண்டு நாள் பயணமாக, மேற்கு வங்கத்துக்கு சமீபத்தில் சென்றார். டைமண்ட் ஹார்பர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, அவர் காரில் சென்ற போது, அவரது கார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற கார்கள் மீது, மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் காயம்அடைந்தனர்.
திரிணமுல் தொண்டர்களே, இந்த தாக்குதலை நடத்தியதாக, பா.ஜ., குற்றம்சாட்டியது. இந்த சம்பவம் குறித்து, மாநில கவர்னர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தலைமை செயலர், டி.ஜி.பி., ஆகியோர் நேரில் ஆஜராகக்கோரி, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் ஆஜராக தேவையில்லை என, மேற்கு வங்க அரசு தெரிவித்துவிட்டது.
ஜே.பி.நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க போலீஸ் ஐ.ஜி., ராஜீவ் மிஸ்ரா, டி.ஐ.ஜி., பிரவீன் குமார் திரிபாதி, டைமண்ட் ஹார்பர் எஸ்.பி., போலா நாத் பாண்டே ஆகியோரை, பணியிலிருந்து விடுவிப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
பின்பற்றுவதில்லை
இந்நிலையில், இந்த மூன்று பேரும், அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின், எஸ்.பி.,யாக போலாநாத் பாண்டேவும், துணை ராணுவ படையான ஷசாஸ்த்ர சீமா பாலின், டி.ஐ.ஜி.,யாக, பிரவீன் திரிபாதியும், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையின், ஐ.ஜி.,யாக ராஜிவ் மிஸ்ராவும், பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு, மாநில தலைமை செயலருக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு, முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 'டுவிட்டரில்' அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் மறைமுக நெருக்கடி நிலையை, மத்திய அரசு திணித்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது. மாநில அரசிடம் ஆலோசனை பெறாமல், ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, மத்திய அரசு பணிக்கு மாற்றக் கூடாது; ஆனால், எந்த நெறிமுறைகளையும், மத்திய பா.ஜ., அரசு பின்பற்றுவதில்லை.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE