திருவனந்தபுரம்:கடந்த லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், காங்., தோல்வி அடைந்தது, கட்சியில் கோஷ்டி மோதல், எதிர்ப்பு கானத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மாநிலத் தலைவரை மாற்ற, பலர் குரல் எழுப்பியுள்ளனர்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது.
வெற்றி
அடுத்தாண்டு, ஏப்., - மே மாதங்களில், சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் சமீபத்தில், மூன்று கட்டங்களாக நடந்தது. இந்தத் தேர்தலில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, மாநிலத்தில் உள்ள, 20 தொகுதிகளில், 19ல் காங்., வென்றது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாதது, கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில், 375 கிராமப் பஞ்சாயத்துகள், 44 வட்டார பஞ்சாயத்துகள், 45 நகராட்சிகள், மூன்று மாவட்ட பஞ்சாயத்துகளில், காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி முன்னிலையில் உள்ளது.பல மூத்த தலைவர்கள், வெளிப்படையாகவே தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். மாநிலத் தலைவர், முல்லப்பள்ளி ராமச்சந்திரனை மாற்றும்படி, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகளை மாற்றக் கோரி, 'போஸ்டர்கள்' ஒட்டப்பட்டுள்ளன.இதுபோல, கோழிக்கோடு உட்பட பல இடங்களிலும், கட்சியின் தோல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இதற்கிடையே, காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், பி.ஜே. குரியன், வடக்கரை, எம்.பி.,யான, கே.முரளீதரன், காசர்கோடு, எம்.பி.,யான ராஜ்மோகன் உன்னிதன் ஆகியோர், முல்லப்பள்ளி ராமச்சந்திரனுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு கோஷம்
''கட்சியில் ஜனநாயகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. மக்கள் மட்டுமல்ல, கட்சியினரின் நம்பிக்கையையே நாம் இழந்து வருகிறோம்,'' என, மற்றொரு மூத்த, எம்.பி.,யான, கே.சுதாகரன் கூறியுள்ளார்.இவ்வாறு காங்., மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு கோஷம் எழுப்பியுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளும், தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
''மாநிலத்தில், அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது. ஆனால், அதை சரியாக பயன்படுத்த தவறி விட்டோம்,'' என, முக்கிய கூட்டணி கட்சியான, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர், பி.கே.குஞ்சாலிகுட்டி கூறியுள்ளார்.மற்றொரு கூட்டணி கட்சியான, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியும், இது போன்றை கருத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான, ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளதாவது:கடந்த,2015 உள்ளாட்சித் தேர்தலைவிட, சற்று அதிக இடங்களில் தற்போது வென்றுள்ளோம். அரசுக்கு எதிரான மனநிலை இல்லை என்பது தெரிகிறது. தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம்.
மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம் என கூறிய, பா.ஜ., படுதோல்வி அடைந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதகொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
பலத்தை இழக்கவில்ல!
மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி, தன் பலத்தை இழக்கவில்லை. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை அதிகரித்துள்ளன. நம்மால் அதை செய்ய முடியவில்லை; அதுவே தோல்விக்கு காரணம்.
ராஜ்மோகன் உன்னிதன்,
எம்.பி., - காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE