சென்னை:தனியார் பள்ளிகளில், ஆன்லைனில் அரையாண்டு தேர்வு நடத்த, பள்ளிக்கல்வி அதிகாரிகள், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
தமிழக பள்ளிகளில், ஆகஸ்ட், செப்டம்பரில் காலாண்டு தேர்வும், டிசம்பரில் அரையாண்டு தேர்வும் நடத்தப்படும். இந்தாண்டு கொரோனா பிரச்னையால், பள்ளிகள் இன்னும் திறக்கப்பட வில்லை; ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க, முன்னேற்பாடு பணிகள் துவங்கிஉள்ளன.
முதற்கட்டமாக, மாணவர்களை கையாள்வது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது குறித்தும், ஆசிரியர்களுக்கு பயிற்சி துவங்கியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் மட்டும், விருப்பப்பட்டால் அரையாண்டு தேர்வை நடத்தி கொள்ளலாம் என, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து,தனியார் பள்ளிகள், ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளன. இந்த தேர்வை நடத்த, முதன்மை கல்வி அலுவலர்கள் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும். தேர்வு நடத்தி, அதில் வரும் மதிப்பெண்களை வைத்து, மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக்கூடாது. தேர்வுக்காக தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது என, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE