சென்னை:லஞ்ச முதலை பாண்டியனின் வங்கி லாக்கரை திறந்து, அதில், பதுக்கி வைக்கப் பட்டு உள்ள, பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்ய போலீசார் முடிவெடுத்து உள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை,பனகல் மாளிகையில் செயல்படும், சுற்றுச்சூழல் துறை இயக்ககத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் பாண்டியன், 58. இவரது அலுவலகம் மற்றும் சென்னை சாலிகிராமம், திலகர் தெருவில் உள்ள வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார், இரு தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர்.அப்போது, 1 கோடியே, 37 லட்சத்து, 88 ஆயிரத்து, 500 ரூபாய் ரொக்கம்; 3 கிலோ தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள்; 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம்; 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
போலீசாரின் விசாரணையில், மேலிடத்து செல்வாக்கு காரணமாக, பாண்டியன், லஞ்ச முதலையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.இவர், சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில், வாங்கி குவித்துள்ள சொத்துக்களை அடையாளம் காணும் பணியில், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், பாண்டியனின், வங்கி லாக்கரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பதுக்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. எனவே, வங்கி லாக்கரை திறந்து சோதனை செய்ய, அவர்கள் முடிவு செய்துள்ளனர். அது தொடர்பாக, வங்கி அதிகாரிகளுக்கு, நேற்று கடிதம் எழுதி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE