சென்னை:அரசாணை, சுற்றறிக்கைகளை, தமிழில் வெளியிட கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பழனி தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், முதல் மொழியாக தமிழ்; இரண்டாம் மொழியாக, ஆங்கிலம் என, இரு மொழி கொள்கை பின்பற்றப் படும் நிலையில், அரசு அதிகாரிகளால், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது.
அரசின் உத்தரவு, அரசாணை, சுற்றறிக்கை, கடிதம் போன்றவை, ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன.பட்ஜெட் உள்ளிட்ட அறிக்கை, தமிழில் தயாரிக்கப்பட்டு, எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நடைமுறையை, அரசாணை, சுற்றறிக்கை, கடிதம் தயாரிக்கும் போது பின்பற்றுவதில், எந்த சிக்கலும் இல்லை.
அரசாணை, சுற்றறிக்கைகளை தமிழ் மொழியில் வெளியிடக்கோரி அனுப்பிய மனு மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தலைமை செயலர், தமிழ் வளர்ச்சி துறை செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, மார்ச், 29க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE