திருப்பூர்:உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதால், திருப்பூர் நிறுவனங்கள், உள்நாட்டு சந்தைக்கான பின்னலாடை விலையை, 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.
திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நாடுமுழுவதும் உள்ள வர்த்தகரிடம் ஆர்டர் பெற்று, அனைத்து வகை பின்னலாடை ரகங்களை தயாரிக்கின்றன. பஞ்சு விலை உயர்வால், தமிழக நுாற்பாலைகள், நுால் விலையை உயர்த்தி வருகின்றன. இரண்டு மாதங்களில் மட்டும், கிலோவுக்கு, 17 ரூபாய் ஒசைரி நுால் விலை உயர்ந்துள்ளது.அதேபோல், எலாஸ்டிக், பாலிபேக், அட்டைபெட்டி விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன. பிரின்டிங் துறை உள்ளிட்ட மற்ற ஜாப்ஒர்க் துறையினரும், விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இதனால், நிறுவனங்களின் பின்னலாடை உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது.உற்பத்தி செலவினம் அதிகரிப்புக்கு ஏற்ப, நிறுவனங்கள் ஆடை விலையை உயர்த்திக்கொள்ளவேண்டும் என, தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) அறிவுறுத்தியது. அவ்வகையில், தற்போது, பின்னலாடை நிறுவனங்கள், 5 முதல் 10 சதவீதம் வரை ஆடைகள் விலையை உயர்த்தியுள்ளன.இது குறித்து, லகுஉத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம் கூறியதாவது:தொழிலாளர் பற்றாக்குறை, கொரோனாவுக்கு முன் அனுப்பிய ஆடைக்கான தொகைகளை வர்த்தகரிடமிருந்து வசூலிப்பதில் தாமதம் என ஏற்கனவே, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தவித்து வருகின்றன.இச்சூழலில், நுால் விலை, எலாஸ்டிக், பாலிபேக், அட்டைபெட்டி உட்பட அனைத்துவகை மூலப்பொருட்கள் மற்றும் ஜாப்ஒர்க் கட்டணங்கள் விலை உயர்வு, மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது; ஆடை உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளன.
வர்த்தகர்களை பொருத்தவரை, குறைந்த விலைக்கு ஆடை கிடைக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். சிலர், விலை உயர்வு அளிக்க மறுக்கின்றனர். மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு குறித்து புரியவைத்து, தொகையை பெற்று வருகிறோம்.தொழில் சூழலை கருத்தில் கொண்டு, நுாற்பாலைகள், நுால் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். விலை உயர்த்தாத ஜாப் ஒர்க் நிறுவனங்களும், கட்டண உயர்வு முடிவை, சில மாதம் தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE