திருப்பூர்:அமர்ஜோதி கார்டன் குடியிருப்பு பகுதியில் ஆழ்குழாய் கிணற்று தண்ணீர் மஞ்சள் நிறமாக வருகிறது. இதனால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி, காங்கயம் ரோட்டில் அமர்ஜோதி கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. நுாற்றுக்கணக்கான வீடுகள் இப்பகுதியில் உள்ளது.வீட்டு உரிமையாளர்கள் பலரும் தங்கள் பயன்பாட்டுக்காக ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளனர். இதிலிருந்து வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாகவும், ஆயில் பசையுடனும் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:கடந்த மூன்று மாதமாக இதில் வரும் நீர் மஞ்சள் நிறத்துடன், ஆயில் கலந்த நிலையிலும் உள்ளது. இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து, நீர் மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதும், ஆயில் மற்றும் கிரீஸ் கலவை கலந்து இருப்பதும் தெரிந்தது.இங்குள்ள சாக்கடை கால்வாயில் சில நேரங்களில் அதிக துர்நாற்றத்துடன் சாயம் கலந்த நீர் வெளியேற்றப்படுகிறது.
சுற்றுப்பகுதியில் எதாவது ரகசியமாக கழிவுகள் வெளியேற்றும் ஆலைகள் இயங்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் நிரப்பும் கழிவு நீர் மூலம் இப்பகுதி கிணறுகளில் நீரின் தன்மை மாறியிருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆழ்குழாய் கிணற்றில் வந்த மஞ்சள் நிற தண்ணீர் மாதிரியை, ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். அதன் பரிசோதனை முடிவு வந்தவுடன், எப்பகுதியில் இருந்து மாசு கலக்கிறது என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE