திருப்பூர்:பூமலுார் அருகே, பி.ஏ.பி., வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய கட்டுமானத்தை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று இடித்து அப்புறப்படுத்தினர்.பூமலுார் பி.ஏ.பி., பாசன சபையில், 2,200 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட, இப்பகுதிக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டது. பூமலுார் பாசன சபைக்கு உட்பட்ட பகுதியில், வாய்க்காலை ஆக்கிரமித்து, கட்டுமான பணி நடப்பதாக, புகார் எழுந்தது.பூமலுார் கதிரவன் பள்ளி அருகே, கான்கிரீட் வாய்க்காலை உடைத்து, கட்டுமான பணி நடப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த அக்., மாதம், பி.ஏ.பி., பாசன திட்ட அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர். அதனை தொடர்ந்து, ஆக்கிரமிப்பு கட்டடம் நேற்று இடித்து அகற்றப்பட்டது.பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் பூமலுார் பாசன சபை தலைவர் சவுந்திரராஜன் முன்னிலையில், வாய்க்கால் நேற்று மீட்டெடுக்கப்பட்டது.பொதுப்பணித்துறை (பி.ஏ.பி., திட்டம்) உதவி பொறியாளர் சியாமளா கூறியதாவது:பொதுப்பணித்துறை சட்டவிதிகளின்படி, பி.ஏ.பி., வாய்க்காலை சேதப்படுத்துவது மிகப்பெரிய குற்றம். விவசாயிகள் புகாரை தொடர்ந்து, பூமலுார் பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. வாய்க்காலை மூடியும், கான்கிரீட் தடுப்பை உடைத்தும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். சட்ட விதிகளின்படி, வாய்க்கால் மீது எழுப்பிய கட்டுமானம் இடித்து அகற்றப்பட்டு, வாய்க்கால் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE