அன்னுார்:''நாட்டுக்கோழி வளர்ப்பில், நல்ல வருமானம் பெறலாம்'' என, அன்னுார் அருகே நடந்த விழாவில், கால்நடை டாக்டர் தெரிவித்தார்.தமிழக அரசு, நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திட்டத்தில், எல்.கோவில்பாளையம் கால்நடை மருந்தகம் சார்பில், வடக்கலுார் மற்றும் கணுவக்கரை ஊராட்சிகளை சேர்ந்த, 60 பயனாளிகளுக்கு, தலா, 25 அசிலி இனத்தை சேர்ந்த, நான்கு வாரங்கள் ஆன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி, பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கினார். கால்நடை டாக்டர் வசந்த் பேசியதாவது:கோழிக்குஞ்சு வளர்ப்பு அருமையான தொழில். கோழிக்குஞ்சுகளுக்கு, சுத்தமான நீர் மட்டும் தர வேண்டும். ஐந்து அடிக்கு ஐந்து அடியில் ஒரு கூண்டு அமைத்து வளர்த்தால், மிகவும் நல்லது. புரத சத்து, மாவுச்சத்து அடங்கிய உணவுப்பொருட்கள் தர வேண்டும். கரையான் வளர்த்தால், அவற்றை கோழி குஞ்சுகள் ஆர்வமாக சாப்பிடும்.அரிசி குருணை, கோதுமை குருணை, தவிடு ஆகியவற்றை தரலாம். வீட்டில் மீதமாகும் சாப்பாடு உட்பட உணவு பொருட்களையும் தரலாம். நாளொன்றுக்கு, 90 கிராம் உணவு தர வேண்டும். தற்போது தரப்பட்ட கோழி குஞ்சுகள், நான்கு அல்லது ஐந்து மாதத்தில், ஒன்றரை கிலோ எடைக்கு வந்து விடும். இதில் சிலவற்றை அடைகாக்க விட வேண்டும். இதன் வாயிலாக, கோழி குஞ்சுகளின் எண்ணிக்கை சில மாதங்களிலேயே பல மடங்கு பெருகி விடும். தற்போது, நாட்டுக்கோழிகளை, ஒரு கிலோ 500 ரூபாய்க்கு வியாபாரிகளே, பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கோழி குஞ்சுகளை நல்ல முறையில் வளர்த்து நல்ல வருமானம் பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் அமுல் கந்தசாமி முன்னிலை வகித்தார். வடக்கலுார் ஊராட்சி தலைவர் ராஜ்குமார், வார்டு உறுப்பினர்கள், பயனாளிகள் பங்கேற்றனர். கால்நடை பராமரிப்பு துறை கோவை மண்டல துணை இயக்குனர் ராகவன், உதவி இயக்குனர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில், பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி தரப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE