அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், 32 ஆயிரம் குடும்பங்களுக்கு, மருந்து பெட்டகம் வினியோகம் நேற்று துவங்கியது.கொரோனா பரவலைத் தடுக்க, அனைத்து குடும்பங்களுக்கும், கொரோனா தடுப்பு மருந்து பெட்டகம் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்படுகிறது. அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில், 32 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.குடும்பங்களுக்கு, ரேஷன் கடைகள் வாயிலாக, மருந்து பெட்டகம் வினியோகம் நேற்று துவங்கியது. நாரணாபுரம் ஊராட்சி பொத்தியாம்பாளையத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் சாய் செந்தில் துவக்கி வைத்தார்.ஒன்றிய அதிகாரிகள் பேசுகையில், 'பெட்டகத்தில் உள்ள வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து மாத்திரையை தினசரி ஒரு வேளை என, 10 நாட்கள் உட்கொள்ள வேண்டும். ஆர்சனிக் ஆல்பம் எனும் குளிகையை, தினசரி காலையில் மூன்று வீதம், மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இந்த மருந்தை தரக்கூடாது. இத்துடன் கபசுர குடிநீர் பவுடர் உள்ளது. ஒரு ஸ்பூன் பவுடரை, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்' என்றனர்.மாவட்ட கவுன்சிலர் அபிநயா, ஊராட்சித் தலைவர் ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் பிரபு, பாசறை மாவட்ட செயலாளர் கோகுல் குமார், விவசாயிகள் அணி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நாரணாபுரம் ஊராட்சியில், 700 குடும்பங்களுக்கு, இரண்டு ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE