மதுரை:'காவல் துறையில் எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன; 10 ஆண்டுகளில் எத்தனை போலீசார் தற்கொலை செய்துள்ளனர் என்பதற்கு பதிலளிக்கத் தவறினால், உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு சம்மன் அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்தது.
கரூரைச் சேர்ந்த மாசிலாமணி, 'போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். போலீஸ், எஸ்.ஐ., காலிப் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என பொதுநல மனு செய்தார். டிச.,7 ல் நீதிபதிகள் உத்தரவு:போலீசாரின் குறைகளுக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க, உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. அதன்படி அமைக்கப்பட்டதா, 10 ஆண்டுகளில் எத்தனை போலீசார் தற்கொலை செய்து உள்ளனர்?
காலிப் பணியிடங்கள் விபரம், எத்தனை போலீசார் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதற்கு தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவு பிறப்பித்தனர்.நேற்று நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. பதில் மனு செய்ய அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
நீதிபதிகள் உத்தரவு:அரசுத் துறைகளில், மற்றவர்கள் குறைகளை தெரிவிக்க சங்கம் உள்ளது. போலீசாருக்கு அதுபோன்ற நிலை இல்லை. போலீசார் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், நிலைமை என்னவாகும். போலீசாருக்கு என்னென்ன திட்டங்கள் உள்ளன என உயரதிகாரிகளுக்குத் தெரியாதா?
போலீசாருக்கு என்ன பிரச்னைகள் உள்ளன, அதற்கு தீர்வு என்ன என மாறுபட்ட கோணத்தில், கேள்விகள் கேட்கிறோம். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், கீழ்நிலையில் என்ன நடக்கிறது என்பதை சிந்திப்பதில்லை.கால அவகாசம் கோருவது ஏற்புடையதல்ல. இன்று பதில் மனு தாக்கல் செய்யத் தவறினால், உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு, நீதிபதிகள் எச்சரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE