கடலுார்:கள்ளக்காதலனை குத்தி கொலை செய்த பெண்ணுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், வடலுார் நெய்வேலி சாலையில் வசிப்பவர், திரிசங்கு மனைவி அஞ்சலை, 50. என்.எல்.சி., யில் ஒப்பந்த தொழிலாளியான திரிசங்கு, 2001ல் அங்கு நடந்த விபத்தில் இறந்தார். கணவருக்கு சேர வேண்டிய பணத்தை பெற, ஒப்பந்த தொழிலாளி குணசேகர், 45, அஞ்சலைக்கு உதவி செய்தார். குணசேகருடன் அஞ்சலிக்கு தொடர்பு ஏற்பட்டது. மந்தாரக்குப்பம் அருகே, வாடகைக்கு வீடு எடுத்து, 15 ஆண்டுகளாக குடும்பம் நடத்தினர்.
இதனிடையே, நெய்வேலியைச் சேர்ந்த, வேறு ஒரு பெண்ணுடன் குணசேகருக்கு, தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள, அஞ்சலையிடம் சம்மதம் கேட்டுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 2016, ஜூன், 22ல் ஏற்பட்ட தகராறில் அஞ்சலை, குணசேகரை கத்தியால் குத்தி கொலை செய்தார். வடலுார் போலீசார், அஞ்சலையை கைது செய்து, கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிபதி செந்தில்குமார், அஞ்சலைக்கு ஆயுள் தண்டனை விதித்து, தீர்ப்புஅளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE