பெரம்பலுார்:''பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார்,'' என, முதல்வர் பழனிசாமி., தெரிவித்தார்.
அரியலுார் கலெக்டர் அலுவலகத்தில் , முதல்வர் பழனிசாமி., வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரி களுடன், ஆய்வு மேற்கொண்டார்.
70 வயதில் அரசியல்
பின், அவர் அளித்த பேட்டி:நடிகர் கமல் ஓய்வு பெற்ற பின், அரசியலுக்கு வந்துள்ளார். 70 வயதில், பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். பிக்பாஸை பார்த்தால், குடும்பம் கெட்டுப் போகும்.அப்படிப்பட்டவர் ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். அப்படிப்பட்ட தலைவரின் கேள்விக்கெல்லாம் கருத்து சொல்ல முடியுமா?
நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர் அவர் அல்ல. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவர் வேலை. அந்த தொடரை பார்த்தால், குழந்தைகளும் கெட்டு போகும். எம்.ஜி.ஆர்., நடித்த படங்கள் அனைத்தும் நல்ல படங்கள். கமல் ஒரு நல்ல படமாவது எடுத்துள்ளாரா? பிரதமர் பாராட்டுதிட்டங்களை செயல்படுத்தியதில், தமிழக அரசு முதல் மாநிலமாக செயல்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில், தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி உள்ளது என, பிரதமரே பாராட்டி உள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எதற்கெடுத்தாலும் குறை சொல்லி வருகிறார்.அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கி சிக்கி வருகின்றனர் என கமல் கூறுகிறார். லஞ்ச ஒழிப்புத் துறை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
சிறுவனுக்குசாக்லேட்
முன்னதாக, சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதி, லத்துவாடியில், 'மினி கிளினிக்'கை, முதல்வர் திறந்து வைத்தார். அங்கிருந்து, அரியலுார் செல்லும் வழியில், பெரம்பலுார், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அ.தி.மு.க., சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, சாலையோரம் தன் பெற்றோருடன் வந்திருந்த சிறுவன், முதல்வரின் கார் தன்னை கடந்த போது, கைகூப்பி வணங்கினான். இதை பார்த்த முதல்வர் காரை நிறுத்தி, சிறுவனை அருகில் அழைத்து சாக்லேட் கொடுத்து சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE