அன்னுார்:குன்னத்துார் குளத்தில் லோடு கணக்கில் மண் கடத்திய லாரியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.அன்னுார் அடுத்த குன்னத்துாரில், இரண்டரை ஏக்கர் பரப்பளவில் குளம் உள்ளது. மழை நீர் வரத்து இல்லாமல் குளம் காய்ந்து கிடக்கிறது. குளத்தில், கடந்த இரு நாட்களாக, பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தி, நான்கு டிப்பர் லாரிகளில், லோடு கணக்கில் மண் அனுமதியின்றி எடுக்கப்பட்டது. இதை கண்ட இப்பகுதி மக்கள், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் புகார் செய்தனர். அதன் பிறகும், தொடர்ந்து மண் கடத்துவது தொடர்ந்தது.ஆவேசமடைந்த கிராம மக்கள், நேற்று காலை, குன்னத்துார் குளத்திற்கு சென்று டிப்பர் லாரிகளை முற்றுகையிட்டனர். வாகன ஓட்டிகளிடம், அரசு அனுமதி உள்ளதா என்று கேட்டு, வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, அங்கு அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், டிப்பர் லாரிகளையும், பொக்லைன் இயந்திரத்தையும் எடுத்து சென்று விட்டனர்.கிராம மக்கள் கூறுகையில், 'மூன்று மாதங்களுக்கு முன்பும், அருகில் உள்ள குட்டையில் லோடு கணக்கில் மண் கடத்தினர். இதுகுறித்து தெரிவித்தபோதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இரு நாட்களாக, இரவு பகலாக மண் கடத்தலில் ஈடுபடுகின்றனர். மண்ணை எடுத்து ரியல் எஸ்டேட் புரமோட்டர்களுக்கு விற்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுக்க வேண்டும். இது குறித்து வி.ஏ.ஓ., அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம்' என்றனர்.தாசில்தார் சந்திரா கூறுகையில், ''மண் கடத்தல் குறித்து புகார் வந்தது. உடனடியாக எச்சரிக்கை செய்யப்பட்டது. தற்போது மண் கடத்தல் எதுவும் இல்லை. இருப்பினும், இதுகுறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE