கோவை:''புதிய சவால்களை எதிர்கொண்டு, மாணவ - மாணவியர் சாதனைகள் படைக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
கோவையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், நடந்த, 41வது பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 1,385 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
நம் நாட்டில்,50 சதவீதம் மக்கள்,விவசாயத்தை நம்பி உள்ளனர்.நவீன தொழில்நுட்பம் அவசியம். விவசாயத் துறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, மரபணு தொகுப்பு, அதிக விளைச்சலை அளிக்கும். புதிய தொழில்நுட்பம் மற்றும் மரபணு ஆராய்ச்சி காரணமாக விவசாய உற்பத்தி, 30 சதவீதம் உயர்ந்துள்ளது; செலவு, 20 சதவீதமாக குறைந்துள்ளது.
எதிர்காலத்தில் வரும் சவால்களை எதிர்கொள்ள சூரியசக்தியை அதிகம் பயன்படுத்துவது, நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது. பட்டம் பெறும் மாணவ - மாணவியர், புதிய தொழில் நுட்பத்திற்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும், தங்களை அர்ப்பணிக்க வேண்டும். புதிய சவால்களை எதிர்கொண்டு, மாணவ - மாணவியர் சாதனைகளை படைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
கவர்னர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நலம் விசாரித்த கவர்னர்பட்டமளிப்பு விழாவிற்கு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்தார். இதற்காக அவர், சென்னையில் இருந்து விமானத்தில் கோவைக்கு வந்தார். தொடர்ந்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். செல்வபுரம், இந்திரா நகர் முத்துசாமி காலனி பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த போது, காரை நிறுத்துமாறு கவர்னர் கூறினார்.
காரில் இருந்து இறங்கிய அவர், அப்பகுதியில் இருந்த மளிகைக்கடை, அரிசிக் கடைகளுக்கு சென்று, அங்கிருந்த மக்களிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து, 'முக கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவை ஒழிக்க, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என, அறிவுரை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE