மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...

Added : டிச 18, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' யாம் ஆண்டாள் நாச்சியார், பக்தி உலகிற்குப் பாடிக் கொடுத்த பனுவல்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை; முப்பது பாசுரங்கள் கொண்டது; பாவை நோன்பின் விளக்கமாக அமைவது. மற்றொன்று நாச்சியார் திருமொழி; 143 பாசுரங்களால் அமைந்தது. ஆண்டாள் நாச்சியாரின் ஆழ்ந்த இறைக்காதலைப் புலப்படுத்துவது.திருப்பாவை என்பது தமிழ்ப்பாசுரம் மட்டுமன்று; அது ஒரு பெருவேள்வி.
 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...

'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' யாம் ஆண்டாள் நாச்சியார், பக்தி உலகிற்குப் பாடிக் கொடுத்த பனுவல்கள் இரண்டு. ஒன்று திருப்பாவை; முப்பது பாசுரங்கள் கொண்டது; பாவை நோன்பின் விளக்கமாக அமைவது.

மற்றொன்று நாச்சியார் திருமொழி; 143 பாசுரங்களால் அமைந்தது. ஆண்டாள் நாச்சியாரின் ஆழ்ந்த இறைக்காதலைப் புலப்படுத்துவது.திருப்பாவை என்பது தமிழ்ப்பாசுரம் மட்டுமன்று; அது ஒரு பெருவேள்வி. ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கே 'இறைவன் குணங்களில் ஆழ்ந்து ஈடுபட்டவர்' என்று பொருள். மற்ற ஆழ்வார்களைவிடப் பெரியாழ்வார் எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். அந்தப் பெரியாழ்வாரைவிட அவரது வளர்ப்பு மகளான ஆண்டாள் பல மடங்கு உயர்ந்தவள் என்பது வைணவச் சான்றோர்களின் கருத்து. 'ஆண்டாள் மலை; மற்றவர் அவள் முன் துாசி'என சிறப்பித்துக் கூறுவது வைணவ மரபு. ஆழ்வார்குடி அனைத்திற்குமே ஒரு தனி மகளாய்த் துலங்குபவள் ஆண்டாள் ஒருவரே.


பாவை நோன்பு


பாவை என்பது சங்ககாலத்தில் 'பொம்மை' என்ற பொருளில் வழங்கி வந்தது. மகளிர் கடற்கரையில் மணலால் பாவை செய்து விளையாடும் பழக்கம் சங்க காலத்தே இருந்தது என்பதற்குப் பல பாடல்கள் சான்றாக உள்ளன.'நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டல் பாவை' (நற்றிணை)'வண்டல் பாவை வரிமணல் அயர்ந்தும்' (அகநானுாறு)என்ற பாடல் வரிகள், கடற்கரையில் நெய்தல் நில மகளிர் மணலால் பாவை செய்து விளையாடியதை உணர்த்துகின்றன.
பாவை போல உருவத்தை அமைத்து நோன்பு நோற்ற காரணத்தால் அந்நோன்பு 'பாவை நோன்பு' என வழங்கப்பட்டது. இந்நோன்பினை அடிப்படையாகக் கொண்ட பாடல்களைப் 'பாவைப் பாடல்கள்' என வழங்கினர்.

திருப்பாவை அமைப்பு

திருப்பாவை மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. 1 முதல் 5 பாடல்கள் பாவை நோன்பின் சிறப்பைக் கூறுகின்றன. 6 முதல் 15 வரையுள்ள பத்துப்பாடல்கள் இரண்டாம் பகுதி. இவை உறங்குகின்ற தோழிமார்களை எழுப்புவதாக அமைந்துள்ளன.மூன்றாம் பகுதியில் 16 முதல் 21 வரை உள்ள பாடல்கள் கோயில் காப்பவன், வாயில் காப்பவன், நந்தகோபன், யசோதை, நப்பின்னை, கண்ணன், பலராமன் ஆகியோரைத் துயிலெழுப்புவதாகவும், 22 முதல் 25 வரை உள்ள பாடல்கள் கண்ணனை எழுப்பிய பின் அவனது அருட்பார்வையை வேண்டி நிற்பதாகவும், 26 முதல் 30 வரை உள்ள பாடல்கள் கண்ணனிடம் வேண்டுவனவற்றைக் கேட்பதாகவும் அமைந்துள்ளன. இம்மூன்றாம் பகுதி ஆய மகளிரை எம்பெருமானின் கைங்கரியத்திற்குத் தகுதியுடையவராகச் செய்தல் ஆகும் என்பர்.முதற்பாடல்
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த
நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ
நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்
சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன்
நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை
இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண்
கதிர்மதியம் போல்முகத்தான்நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர்
எம்பாவாய்”
மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் திருப்பாவையின் முதற்பாசுரத்திலேயே உபநிடதங்களின் ஆழ்பொருளை, மற்ற முப்பது பாசுரங்களின் பொருளை சுருக்கமாகக் கூறிவிடுகிறார்
ஆண்டாள். மார்கழி மாதத்திற்கு 'மார்கசீர்ஷம்' என்று பெயர்.

'மார்கம்' என்றால் 'வழி',

'சீர்ஷம்' என்றால் 'தலை', வழிகளுக்குள்ளே உயர்ந்தது என்று பொருள். ஆண்டாள் காட்டிய உயர்ந்த வழி சரணாகதி. அவசர லோகத்திலே ஓடிக்கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்குச் சரணாகதியைத் தவிர வேறு உயர்ந்த உபாயம் இல்லை. இதைத் திருப்பாவையின் முப்பது பாசுரங்களில் ஆணித்தரமாக
எடுத்துக்காட்டுகிறார் ஆண்டாள்.


மாதங்களில் மார்கழிசூரியோதயத்துக்குச் சற்று முன்புள்ள நேரம் பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது. இரவுப்பொழுதின் கடைசிப் பகுதியான 4:00 முதல் 6:00 மணி வரையிலுள்ள பிரம்மமுகூர்த்தம் மிக நல்ல வேளையாகக் கருதப்படுகிறது.அப்பொழுது செய்யும் தேவாராதனை, வந்தனை, வழிபாடு முதலியன மனத்தை நன்கு பண்படுத்த வல்லவைகளாகும். இங்ஙனம் மார்கழி மாதம் புலனடக்கம், கடவுள் வழிபாடு ஆகியவைகளோடு முழுதும் இணைக்கப்பட்டிருப்பதால் 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என கீதையில் சொல்லியிருக்கிறார் கண்ணபெருமான்.இத்தகைய சிறப்புத் தோன்றும் மார்கழி மாதத்தில் நற்செயல்களை, நோன்பை செய்வதற்குச் சிறந்தது வளர்பிறை என்பதால், 'மதி நிறைந்த நன்னாள்'என்று கொண்டாடுகின்றனர் ஆயர் சிறுமியர். பால், நெய் முதலியவற்றால் சிறப்புற்றுத் திகழும் திருவாய்ப்பாடியில் கண்ணபிரான் வந்து பிறந்தமையால் 'சீர்மல்கும் ஆய்ப்பாடி' எனப்பட்டது. 'சீர்' என்பது பகவானுடைய குணங்களைக் குறிப்பதாகக் கொண்டு 'பகவத் குணங்கள் வெள்ளமிடும் ஆய்ப்பாடி' என்றும் பொருள் கொள்ளலாம்.

கண்ணனை மகனாகப் பெற்ற பின்பு அவனிடத்துள்ள அன்பு மிகுதியால் அவனுக்குத் தீங்கு செய்ய வருவாரைச் சீறிக்கொல்வதற்காக எப்போதும் கூரிய வேலும் கையுமாக இருந்தமையால் நந்தகோபன் 'கூர்வேற் கொடுந்தொழிலன்' எனப்பட்டான். கண்ணபிரானது செயல்களைக் கண்ட களிப்பின் மிகுதியால்
யசோதைக்குக் கண்கள் அழகோடு விளங்குவதால் 'ஏராந்த கண்ணி' என அவளுக்கு அடைமொழி கொடுக்கப்பட்டது.


வேதாந்த தேசிகர்கண்ணனது முகத்தில் வீசும் ஒளிக்குக் கதிரவனும், குளிர்ச்சிக்குச் சந்திரனும் உவமையாக, 'கதிர்மதியம் போல் முகத்தான்' என்று கண்ணன் கூறப்பெற்றான். திருப்பாவையை உபநிடதம் என்று கூறும் வேதாந்த தேசிகர் இம் முதற்பாசுரத்திலேயே உபநிடதத்தின் சாரம் அமைந்துள்ளது எனக் குறிப்பிடுகிறார். அதாவது 'திருமாலே முழுமுதற் பொருள்; மற்றப் பொருட்கள் எல்லாம் அவனுடைய தனி உடம்பு; அந்தக் கார்மேனிச் செங்கண்ணே தீயோர்களுக்குக் கதிரவனைப் போலவும், நல்லோர்களுக்கு மதியைப் போன்றும் இருக்கும்; எல்லா இன்பங்களையும் தருபவன் அவனே; அவனுக்குப் படிவதே புகழ் மற்றும் செல்வத்தினைத் தரும். நாராயணனைப் பணிவது என்பது சரணாகதித்
தத்துவத்தின் அடிப்படையாகும்' என்கிறார் அவர்.எந்த நுாலிலும் முதல் பாடம், முதல் அத்தியாயம் முக்கியமானது. அது சிறப்பாக அமைந்தால் தான் மேலே படிக்கவே தோன்றும். கம்ப நாடனின் 'உலகம் யாவையும்' திருவாய்மொழியில் 'உயர்வற உயர்நலம் 'பெரியபுராணத்தில் 'உலகெலாம் உணர்ந்து' பகவத் கீதையில் 'தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே' இவை கருத்துச் சிறப்பால் உயர்ந்து விளங்குபவை. அந்த வரிசையில் சேர்வதுடன் திருப்பாவை முப்பது பாடல்களின் சுருக்கமாய் அவற்றைச் சுட்டிக்காட்டும் சொற்றொடர்களுடனும் அமைந்துள்ளது முதற் பாடல்.மார்கழி நோன்பில் அந்த உத்தமன் பேர் பாடி வருகிறார்கள் ஆயர் சிறுமியர். இறைவன் உயர்ந்தவனா, அவன் நாமம் உயர்ந்ததா என்றால், அவனை விட அவன் நாமமே உயர்ந்தது என்பர் வைணவப் பெரியோர், 'கட்டிப்பொன் போலே அவன்; பணிப்பொன் போலே அவன் திருநாமம்'என்பது அவர் கூற்று.

அதனால் 'நாடினேன்; நாடி நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்' என்று திருமங்கையாழ்வார் கூறுவது போன்றும், 'ஆடி ஆடி அகம் குழைந்து இசை பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி' (திருவாய்மொழி) என்று நம்மாழ்வார் பாடுவது போன்றும் ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவை நுாலைப் பாடிப் பாடிப் பரமன் நாமத்தைப் புனைந்துள்ளார்.-முனைவர் நிர்மலா மோகன்எழுத்தாளர், மதுரை94434 58286

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-டிச-202004:46:46 IST Report Abuse
J.V. Iyer அருமை.. அருமையான கட்டுரை.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
18-டிச-202004:25:14 IST Report Abuse
naadodi திருப்பாவை என்பது பாகவத தர்மத்தின் மறு பிரதிபலிப்பு தசம ஸ்கந்தத்தில் கோபி வஸ்த்ராபஹரணம் போது கோபியர் தொழுவது "காத்யாயனி மஹாமாயே மஹாயோகின் யதீஸ்வரீ நந்தகோப சுதம் தேஹீ பதிம் மே குருதே நம:" என்ற மந்திரத்தால், யமுனைக் கரையில் கரிய மண் கொண்டு பிம்பம் பிடித்து தொழுவர் கண்ணனையே தன் பதியாக வேண்டி துர்காதேவியைத் தொழுவதே பாவை நோன்பின் ஆரம்பம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X