தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து தீவிர சிகிச்சைக்காக தினமும் 5 முதல் 10 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்கின்றனர். பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு ஒவ்வொரு மணி துளியும் முக்கியம். இவர்களை உரிய நேரத்தில் கொண்டுசென்று சிகிச்சையளித்தால் உயிரை காப்பாற்றலாம். ஆனால் காத்திருக்க வேண்டியது உள்ளது.
காரணம் என்ன
மாவட்டத்தில் இலவச '108 'ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 27 உள்ளன. இவற்றில் ஒன்று குழந்தைகளுக்காவும், மற்றொன்று பெரியவர்களை அழைத்துச்செல்ல தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருக்கும். இதில் ஒரு வாகனம் மதுரைக்கு பெரியவரை அழைத்துச்சென்றால் அடுத்த நோயாளியை ஏற்றிச்செல்ல கண்டமனுார், அடுத்து கடமலைக்குண்டு ஆம்புலன்ஸ்கள்தான் வர வேண்டும். ஆனால் உடனே வருவது இல்லை.
நோயாளிகள் உயிருக்கு துடிக்கும் நிலையில் பதறும் உறவினர்கள் வேறுவழியின்றி கடன்பெற்று தனியார் ஆம்புலன்ஸ்களில் கட்டணம் செலுத்தி செல்கின்றனர்.
தாமதம் ஏன்
ஆம்புலன்ஸக்கு 4 பேர் வீதம் பைலட், டெக்னீசியன்கள் 121 பேர், வார விடுமுறையில் செல்வோருக்கு மாற்று பணிக்கு 9 பேர் வேண்டும். பணியாளர் பற்றாக்குறையால் சில வாகனங்கள் பகலில் மட்டும் இயக்கப்படுகிறது. 5 வாகனங்களுக்கு மாற்றுப்பணியாளர்கள் இல்லை. சனி, ஞாயிறுகளில்' 108 'ஆம்புலன்ஸ் கடும் தட்டுப்பாடு உள்ளது.
பணியாளர்கள் பற்றாக்குறையை போக்கி, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கூடுதலாக மற்றொரு ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும். மேலும் பரிந்துரை செய்யப்படுவோர் எத்தனை மணிநேரத்தில் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என அதிகாரிகள் ஆய்வு செய்து காரணத்தை கண்டறிந்து தாமதம் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE