விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, ஒரே நாள் பெய்த கன
மழையால், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்கள் மற்றும் கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் மழை காரணமாக, பெரும்பாலான
ஏரிகள் நிரம்பியிருந்தன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மாவட்டம் முழுதும் கன மழை பெய்தது. இதனால், ஏற்கனவே நிரம்பியிருந்த ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தால், உபரி நீர் திறந்து விடப்பட்டது.
பயிர்கள் மூழ்கின
திண்டிவனம் அடுத்த கீழ்பேரடிக்குப்பத்தில் உள்ள ஏரியின் கரை உடைந்து, அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்ததால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.மேலும், திண்டி
வனத்தை சுற்றியுள்ள பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து, சவுக்கை உள்ளிட்ட பயிர்களை, தண்ணீர் சூழ்ந்தது.செஞ்சி அடுத்த சித்தரசூர் நந்தன் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, நெற்பயிர்கள் மூழ்கின.
இதேபோன்று மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறியதில், ஆலங்குப்பத்தில் இருந்து முன்னுார் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.விழுப்புரம் அடுத்த அகரம் சித்தாமூர் பம்பையாற்று தரைப்பாலம் வெள்ளத்தில் சேதமடைந்ததால், 30 கிராமங்களுக்கு போக்குவரத்து
துண்டிக்கப்பட்டது.
இதனால், ராஜாம்பாளையம், வன்னிப்பேர் கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து
துண்டிக்கப்பட்டது. இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியே வரமுடியாமல்
தவித்தனர்.தகவல் அறிந்து வந்த பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், தரைப்பாலத்தின் இருபுறங்களிலும் கயிறு கட்டி, அனைவரையும் மீட்டனர். இதேபோல, புதுச்சேரியிலும்
பரவலாக மழை பெய்தது. பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE