புதுடில்லி:மும்பையை சேர்ந்த மாடல் அழகி ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனால் கடந்த 2013ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்குமாறு மஹாராஷ்டிரா டி.ஜி.பி.க்கு தேசிய பெண்கள் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.
ஜார்கண்ட் முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2013 ஜூலை முதல் 2014 டிசம்பர் வரை ஜார்கண்ட் முதல்வராக பதவி வகித்தார். அந்த சமயத்தில் ஹேமந்த் சோரன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இது குறித்து வெளியே பேசக்கூடாது என்று தன்னையும் தன் குடும்பத்தாரையும் தொடர்ந்து மிரட்டியதாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார் கடந்த 2013ல் வழக்கு பதிவு செய்தனர். பின் இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதாக கூறி வழக்கு திரும்ப பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பெண்கள் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு மஹாராஷ்டிரா டி.ஜி.பி.க்கு தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE