கோவை:''புதிய சவால்களை எதிர்கொண்டு மாணவ மாணவியர் சாதனைகளை படைக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில், நடந்த 41வது பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 1,385 மாணவர்களுக்கு, இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மேற்படிப்புக்கான பட்டங்களை வழங்கி பேசியதாவது:
நம் நாட்டில், 50 சதவீதம் மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். எந்த வானிலைக்கும் தாக்குப்பிடிக்கும் அளவுக்கு லாபகரமாகவும், அதிக விளைச்சலை கொடுக்கக்கூடிய பயிர் ரகங்கள் அவசியம்.கொரோனா பரவலால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. 2021ல் இந்த வீழ்ச்சியில் இருந்து மீண்டு வலிமையான நாடாக இந்தியா மாறும். கொரோனா தொற்று விவசாயத்தை பெரிதளவில் பாதிக்கவில்லை.
ஊரடங்கு சமயத்தில், விதை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து, விவசாயக்கருவிகள், விவசாயக் கடன் வழங்கி விவசாயம் பாதிக்காத அளவில் தடுக்கப்பட்டது.தமிழகத்தில் நிலத்தடி நீர் மாசடைவது அதிகரித்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. வறட்சியை எதிர்க்கொள்ளும் விதை, நீர் சேமிப்பு, நவீன தொழில்நுட்பம் அவசியம். விவசாயத்துறையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள மரபணு தொகுப்பு, அதிக விளைச்சலை அளிக்கும்.
புதிய தொழில்நுட்பம் மற்றும் மரபணு ஆராய்ச்சி காரணமாக விவசாய உற்பத்தி, 30 சதவீதம் உயர்ந்துள்ளது; செலவு 20 சதவீதமாக குறைந்துள்ளது. எதிர்காலத்தில் வரும் சவால்களை எதிர்கொள்ள சூரியசக்தியை அதிகம் பயன்படுத்துவது, நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது.அனைவரும் கூட்டுசேர்ந்து விவசாயத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
பட்டம் பெறும் மாணவ மாணவியர் புதிய தொழில் நுட்பத்திற்காகவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்பணிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு மாணவர்களின் முன்னேற்றத்தை எந்த சூழலிலும் தடுத்துவிடக்கூடாது. புதிய சவால்களை எதிர்கொண்டு மாணவ மாணவியர் சாதனைகளை படைக்க வேண்டும்.இவ்வாறு, துணை ஜனாதிபதி பேசினார்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், உயர்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் அன்பழகன், வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார், பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாரம்பரிய உணவை மறக்காதீர்!
துணை ஜனாதிபதி பேசுகையில், ''தாய், தந்தை, பிறந்த இடம், தாய்மொழி, தாய்நாடு, தாய்நாட்டின் கலாசாரம் ஆகியவற்றை மாணவர்கள் மறந்துவிடக்கூடாது. அந்தந்த பகுதி பாரம்பரிய உணவும், உடையும் மிக முக்கியமானது. கொரோனாவால் நாம் பாதிக்கப்பட்டபோது, நம் பாரம்பரிய உணவு வகையான மோர்குழம்பு, வற்றல் குழம்பு, தயிர்சாதம் போன்றவை நம்மை பாதுகாத்தது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE