ஆத்துார்:''வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்கிற தலைவர்களுக்கு மத்தியில், அ.தி.மு.க., மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதி, லத்துவாடியில், 'மினி கிளினிக்'கை, நேற்று, முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து, மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்டார். தொடர்ந்து, கர்ப்பிணிக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
பின்னர், முதல்வர் பேசியதாவது:இம்மாதம், 31க்குள், தமிழகம் முழுதும், 2,000 மினி கிளினிக் திறக்கப்படும். இங்கு மருத்துவர், செவிலியர், உதவியாளர் நியமிக்கப்பட்டு, காலை, 8:00 முதல், 12:00 மணி வரை, மாலை, 4:00 முதல், இரவு, 7:00 மணி வரை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து மருந்துகளும், இங்கு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நான், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். இன்றளவும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயிகள், கிராம மக்கள் நலன் கருதி, இத்திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதுதவிர, நடமாடும் மருத்துவ குழுவும் உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு, புதிதாக, 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு கடுமையாக இருந்த நிலையில், படிப்படியாக குறைக்கப் பட்டது. இந்தியாவில், இறப்பு சதவீதம் குறைந்துள்ள மாநிலம் தமிழகம்தான். கேரளாவை பார், டில்லியை பார் என, இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் விமர்சித்தனர்.தற்போது, தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா, டில்லியில் அதிகளவில் உள்ளது. இப்போது, அதைப்பற்றி எதுவும் பேசுவதில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்கிற தலைவர்களுக்கு மத்தியில், அ.தி.மு.க., அரசு தான், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது.
கடந்த, 2010ல், தி.மு.க., அங்கம் வகித்த காங்., ஆட்சியில் தான், 'நீட்' தேர்வு கொண்டு வந்தனர். அத்தேர்வுக்கு முன், தி.மு.க., ஆட்சியில், நுழைவுத்தேர்வு இருந்ததால், 40 பேருக்கு மட்டும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, நுழைவுத்தேர்வை ரத்து செய்தார்.அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க, உள் ஒதுக்கீடு குறித்து, எதிர்க்கட்சிகளோ, மக்களோ கோரிக்கை வைக்கவில்லை.
நானே நடைமுறையை பார்த்து, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஏற்படுத்தியதால், 313 பேர் மருத்துவம் படிக்கவும், பல் மருத்துவ கல்லுாரியில், 87 பேருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் - 11 தொடங்கியதால், கூடுதலாக, 1,650 இடங்கள் உள்ளன.கடந்த, 2011, 2016ல், அமைச்சராக இருந்தபோது, சுவேதா நதி குறுக்கே தடுப்பணை, பாலம் கட்டிக் கொடுத்து உள்ளேன். தலைவாசலில், 1,600 ஏக்கரில், 1,000 கோடி ரூபாயில் அமைக்கப்படும் கால்நடை பூங்கா பயன்பாட்டுக்கு வரும்போது, இந்திய அளவில் முன்மாதிரியாக, கெங்கவல்லி தொகுதி இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்துார் எம்.எல்.ஏ., சின்னதம்பி, தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் சந்திரசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE