மதுரை : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியை மார்ச் 31க்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அம்பலகாரன்பட்டி சக்கரை முகமது தாக்கல் செய்த பொதுநல மனு:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட்டில் ரூ.159.70 கோடியில் மேம்பாட்டு கட்டுமானப் பணி நடக்கிறது. ஒப்பந்தப்பணி 2018ல் நவ.,16ல் வழங்கப்பட்டது. ஒப்பந்தப்படி 18 மாதங்களில் பணியை முடிக்க வேண்டும்.
பஸ் ஸ்டாண்ட் தொடர்பான வழக்கில்,' 18 மாதங்களில் பணி நிறைவடையும்,'என மாநகராட்சித் தரப்பில் 2018 டிசம்பரில் உறுதியளிக்கப்பட்டது. 2019 ஜனவரியில் பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டது. இதுவரை கட்டுமானப் பணி நிறைவடையவில்லை.பஸ் ஸ்டாண்ட்டைச் சுற்றிலும் உள்ள ரோடுகளில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நிழற்குடை, குடிநீர், கழிப்பறை உட்பட வசதிகள் இல்லாததால் பயணிகள், டிரைவர், கண்டக்டர்கள் சிரமப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப்பணியை விரைவில் முடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு சக்கரை முகமது குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.மதுரை மாநகராட்சி தரப்பு,'கொரோனா ஊரடங்கால் பணியில் தாமதம் ஏற்பட்டது. தற்போது 80 சதவீத பணி முடிந்துஉள்ளது. விரைவில் முடிக்கப்படும்,' என தெரிவித்தது.நீதிபதிகள்: 2021 மார்ச் 31 க்குள் பணியை முடிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஏப்ரல் முதல்வாரம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனஉத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE