மதுரை : விவசாயப்பணிகள் மட்டுமின்றி விவசாயக் கருவிகள் பழுதடைந்தாலும் இனி தாங்களாகவே சரிசெய்ய முடியும் என்கின்றனர் தனிச்சியம் பிரிவு செம்புகுடிபட்டி இளம்பெண்கள்.
மதுரை விவசாய கல்லுாரி வேளாண் அறிவியல் நிலையத்தில் பண்ணை கருவிகள் பராமரிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஐந்து இளம்பெண்கள் டிராக்டர், ரோட்டோவேட்டர், கோனாவீடர் கருவிகளை பழுதுநீக்கல் குறித்து பயிற்சி பெற்றனர். களையெடுப்பது, நெல், கடலை அறுப்பது, கத்தரிக்காய் பிடுங்குவது போன்ற வேலைகளை மட்டும் செய்து வந்த நிலையில், கருவிகளின் பழுதுநீக்கும் பயிற்சி அவர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
முத்துலட்சுமி, கல்லுாரி மாணவி: இன்ஜினியரிங் முடித்துள்ளேன். கொரோனாவால் வெளியில் செல்ல முடியாத நிலையில், 75 சென்ட் நிலத்தில் மல்லி, வெங்காயம், கத்தரிக்காய் பயிரிட்டோம். அறிவியல் மையம் சார்பில் டிராக்டர் ஓட்டவும், பழுதுநீக்கவும் பயிற்சி தந்தனர். மினி டிராக்டர் வாங்கி நானே உழவு செய்ய ஆசை. பழுதுநீக்குதலில் கூடுதல் பயிற்சி தந்தால், கிராம கருவிகளை சரிசெய்யமுடியும்.
சுமதி, குடும்பத்தலைவி: தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். கொரோனாவால் வாய்ப்பு போனது. ஒரு மாடு வளர்க்கிறோம். நாற்று நட, களையெடுக்க, நீர்ப்பாய்ச்ச தெரியும். இப்பயிற்சிக்கும் சென்றேன். இயந்திர நடவு முறையை கற்றுத் தந்தனர். எவ்வளவு நேரத்தில் எவ்வளவு நாற்றுகள் நடலாம் என தெரிந்து கொண்டேன். டிரம் சீடர், ரோட்டோவேட்டர் பழுதுநீக்கவும் கற்றுக் கொண்டேன்.
ரேணுகாதேவி, தனியார் நிறுவனம்: தையல் வேலை செய்தேன். ஒத்திக்கு வாங்கிய நிலத்தில் விவசாயம் செய்கிறோம். டிராக்டர் ஓட்டி பார்த்தது சந்தோஷம் தந்தது. இயந்திரங்களை பயன்படுத்தினால் செலவு குறையும் என அறிந்து கொண்டேன்.ஆனந்தி, பள்ளி மாணவி: பள்ளி விடுமுறையில் களையெடுக்க செல்வேன். இங்கு விவசாயம் சார்ந்த பயிற்சி கொடுத்தனர். மிஷினை வயலுக்குள் இறக்கினால் வேலை சீக்கிரம் முடியுது. ஆள் பற்றாக்குறைக்கு இது நல்ல விஷயம் தான்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி: பண்ணைக்கருவிகளை பெண்களும் தெரிந்து கொள்ள அரசு டிராக்டர் ஒர்க் ஷாப்பில் இப்பயிற்சி அளித்தோம். தேனீ வளர்ப்பு, மண் பரிசோதனை, நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற பயிற்சிகள் இலவசமாக தருகிறோம்.இவ்வாறு கூறினர்.
தொடர்புக்கு: 0452 - 242 4955.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE