கோவை:கோவை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்கப்படுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், ஏழை கர்ப்பிணிகளுக்கு, சத்தான உணவு கிடைக்கும் வகையில் ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில், பயனடைய கர்ப்பணிகள் கர்ப்பம் உறுதியான, 12 வாரங்களுக்குள் கிராம, நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து, ஆர்.சி.எச்., அடையாள எண் அல்லது பிக்மி எண் பெற்றிருக்க வேண்டும். இப்படி பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு மூன்றாம் மாத முடிவிலும், 4ம் மாத முடிவிலும் ஊட்டச்சத்து வழங்கப்படும்.இதில், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள, சத்துமாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம், குடல் புழு மாத்திரை, டீ கப், பருத்தி துண்டு, நெய், பிளாஸ்டிக் கூடை வழங்கப்படுகிறது.இந்நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்குவதில்லை; இரண்டு முறை வழங்க வேண்டிய பெட்டகம், ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும், அனைவருக்கும் வழங்குவது இல்லை என, கர்ப்பிணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுபற்றி கேட்டால், சுகாதார நிலையங்களில் பணிபுரியும் நர்ஸ்கள் அலட்சியமாக பதிலளிப்பதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில், நெ.4 வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பலருக்கு தற்போது வரை, பெட்டகம், நிதியுதவிகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா காலத்தில் தேவைக்கு, குறைவான அளவில்தான் பரிசு பெட்டகம் வந்தது. எனவேதான் இரண்டு முறை வழங்கமுடியவில்லை. அனைவருக்கும் கிடைக்கும் வகையில், ஒருமுறை வழங்கினோம். தற்போது, பரிசு பெட்டகங்கள் வந்துள்ளன. கிடைக்க பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட சுகாதார நிலையத்தை, தொடர்பு கொண்டால் பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE