திருத்தணி - தொடர் மழை பெய்தாலும் நிரம்பாமல் இருந்த இ.என். கண்டிகை ஏரி, 14 நாட்கள் அப்பகுதி மக்கள் நீர்வரத்து கால்வாயை சீரமைத்ததால், தற்போது ஏரி நிரம்பி வழிகிறது.'நிவர், புரெவி' புயலால் திருத்தணி ஒன்றியத்தில், 12 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்தது.ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் தண்ணீர் நிரம்பி வழிந்தாலும், இ.என்.கண்டிகை ஏரி மட்டும் தண்ணீர் நிரம்பாமல் இருந்தது.இதையடுத்து, கிராம மக்கள் ஒன்றிணைந்து, செருக்கனுார் ஏரியிலிருந்து, இ.என்.கண்டிகை ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாயை, 14 நாட்களாக நீர்வரத்து கால்வாயை சீரமைத்தனர்.இதனால், செருக்கனுார் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் சேதாரம் இல்லாமல், இ.என்.கண்டிகை ஏரிக்கு சென்றது. தற்போது, ஏரி முழு கொள்ளளவை எட்டியும், அதன் உபரி நீர் வெளியேறி அருகில் உள்ள தலையாரிதாங்கல் ஏரிக்கு செல்கிறது.கிராம மக்கள் உழைத்ததால், ஏரி நிரம்பியதையொட்டி, ஒன்றிய குழு துணைத் தலைவர் ஏ.ரவி, ஒன்றிய கவுன்சிலர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில், கிராம மக்கள் ஏரிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.தற்போது, இ.என்.கண்டிகை ஏரி நிரம்பி உள்ளதால், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல், வேர்க்கடலை போன்ற பயிர்களை நடவு செய்ய உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE