கடலுார் - கடலுார் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக பெய்த மழை வெள்ளம் வடிவதற்குள் மீண்டும் கனமழை பெய்து மக்களை மிரட்டி வருகிறது.
அடுத்தடுத்து வந்த சோதனை கட்டத்தால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல்களில் மழை கொட்டி தீர்த்தது. அதிகளவாக சிதம்பரத்தில் 34 செ.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் 4140 மி.மீ,, மழை பெய்தது.புரெவி புயல் கரையை கடந்த பின்பும் மழை தொடர்ந்ததால் கடலுார் மாவட்டம் கடல் போல் காட்சியளித்தது. 1.5 லட்சம் ஏக்கர் நெல் தண்ணீரில் மூழ்கின.
நெல் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் வடிய வைத்து தேவையான மருந்து, உரமிட்டனர். இந்நிலையில் தற்போது தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தற்போது கடலுார், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. கடலுார் மாவட்டத்தில் நேற்று முன் தினம் அதிகாலை முதல் துவங்கிய மழை இடைவிடாது பெய்தது. கடலுாரில் மட்டும் 4.7 செ.மீட்டர் மழை பெய்தது. 2ம் நாளான நேற்று மழை விட்டு விட்டு பெய்தது.
கடலுாரில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்த ஆண்டு பெய்யக் கூடிய இயல்பான மழையான 1206 மி.மீட்டரில், தற்போது 1387.99 மி.மீ., மழை பெய்துள்ளது. இயல்பான மழையை விட இது வரை 181 மி.மீ., கூடுதல் மழை பதிவாகியுள்ளது. கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையளவு வருமாறு: எஸ்.ஆர்.சி., குடிதாங்கியில் 129 மி.மீ; வானமாதேவியில் 115; கடலுார் கலெக்டர் அலுவலகம் 105.5; கடலுார் 103; கொத்தவாச்சேரி 99; மேமாத்துார் 80; சேத்தியாத்தோப்பு 78;, வேப்பூர் 85 ; காட்டுமயிலுார் 74 ; புவனகிரி 71 ; காட்டுமன்னார்கோவில் 63 ; குறிஞ்சிப் பாடி 62.2 ; லால்பேட்டை 62 என மாவட்டம் முழுவதும் 1713.40 மி.மீ., மழை பதிவாகியது.
சராசரியாக 68.54 மி.மீ. ஆகும். கனமழையால் கடலுார் மாவட்டம் மீண்டும் வெள்ளக் காடானது. கடலுார் சாலைகளில் பெருக்கெடுத்த மழை நீர், தாழ்வான பகுதிகளில் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.நிவர், புரெவி புயல் மழையில் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழை நீர் வடிவதற்குள், தற்போது பெய்த மழையில் மீண்டும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.மழையால் கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விளையாட்டு மைதானம், சுற்றுலா மாளிகை உட்பட பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம் வண்ணான்குட்டை பகுதி, சாவடி செல்வகணபதி நகர், பாதிரிக்குப்பம் ஓம்சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட நகர்களில் தண்ணீர் சூழ்ந்து, நகராட்சி மூலம் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE