பொள்ளாச்சி:பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில், கான்கிரீட் ரோடு அமைக்கப்பட்ட, ஐந்து மாதங்களிலேயே சேதமடைந்துள்ளது. தரமாக அமைக்காததால், ரோடு பெயர்ந்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 170.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடக்கிறது. இதற்காக நகரப்பகுதியில் உள்ள ரோடுகள் தோண்டப்பட்டு ஆள் இறங்கும் குழி, குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.அதில், போக்குவரத்து நிறைந்த நியூஸ்கீம் ரோட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக, நல்லா இருந்த கான்கிரீட் ரோடு தோண்டப்பட்டு, குழியை முறையாக மூடப்படாததால் விபத்துகள் ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நியூஸ்கீம் ரோட்டில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடைந்தது.இதனால், ரோடு தோண்டப்பட்ட இடங்களில், கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிகள், குடிநீர் வடிகால் வாரியத்தால், கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டது. ரோடு அமைக்கப்பட்டு, ஐந்து மாதங்களுக்குள் சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில், நியூஸ்கீம் ரோடு மட்டுமே கான்கிரீட் ரோடாக உள்ளது. இதுவும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டு பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருந்தது. இந்நிலையில், ரோடு தோண்டப்பட்ட இடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.ஆனால், கான்கிரீட் ரோட்டில், குழி தோண்டிய இடத்தில் பெயரளவுக்கு, 'பேட்ச் ஒர்க்' போட்டுச் சென்றனர். சில மாதங்களிலேயே ஜல்லி கற்கள் பெயர்ந்து குழியாக மாறியுள்ளது. ஆங்காங்கே ரோடு சேதமடைந்துள்ளது. இது குறித்து, நகராட்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து, ரோட்டை தரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அதிகாரிகள் வழக்கம் போல மெத்தனமாக இருந்ததால், ரோட்டின் நிலை மோசமாகியுள்ளது. மக்களின் வரிப்பணத்தை கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களும், ரோடுகளும் பல நாட்களுக்கு பலன் கொடுக்க வேண்டும். ரோட்டை ஆய்வு செய்து மீண்டும் தரமாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE